கோலாலம்பூர், அக்டோபர்.30-
பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமின் வழக்கறிஞர் எழுப்பும் கேள்விகள், தனது 150 மில்லியன் ரிங்கிட் அவதூறு வழக்கிற்கு எந்தவிதத் தொடர்பும் இல்லாதவை என முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
ஷா ஆலம் உயர்நீதிமன்றத்தில் இவ்வழக்கு தொடர்பாக, நேற்று நடைபெற்ற மூன்றாவது நாள் குறுக்கு விசாரணையின் போது, வழக்கறிஞர் ரஸ்லான் ஹட்ரி ஸுல்கிஃப்லி, அன்வார் தலைமையிலான ஆட்சியில் மலாய்க்காரர்கள் அதிகாரத்தை இழந்து விட்டதாக, மகாதீர் முன்பு கூறிய கருத்துகள் குறித்து கேள்வி எழுப்பினார்.
அதற்குப் பதிலளித்த மகாதீர், அவர் பிரதமர் என்பதால், அவர் சொல்லும் கருத்துகள் முக்கியத்துவம் பெறுகின்றன. மலேசியா இனிமேல் மலாய் நிலம் அல்லாததாக மாற வாய்ப்பு இருப்பதாக அன்வார் கூறியிருந்தார் என்று தெரிவித்தார்.
இதற்கிடையில், மகாதீரின் வழக்கறிஞர் நிஸாம் பாஷிர் அப்துல் காரிம் பாஷிர் அக்கேள்விகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
இவ்வழக்கில் தற்போது கேட்கப்படும் கேள்விகள் கொள்கை மற்றும் அரசியல் சார்ந்தவையாக உள்ளது என்றும், குற்றச்சாட்டின் மையத்துடன் சம்பந்தமில்லாதவை என்றும் நீதிமன்றத்தில் நிஸாம் பாஷிர் வாதிட்டார்.








