பெட்டாலிங் ஜெயா, மார்ச்.13
அரசியல் கட்சிகளில் மகளிர் பிரிவு முற்றாக துடைத்தொழிக்கப்பட வேண்டும் என்று வழக்கறிஞரும், சமூகப் போராட்டவாதியுமான அம்பிகா ஸ்ரீனிவாசன் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஒவ்வோர் அரசியல் கட்சியிலும் மகளிருக்கென்று தனிப்பிரிவு இருப்பது, கட்சியின் தலைமைத்துவத்தில் ஆண் ஆதிக்கத்தை மேலோங்கச் செய்கிறது. இது ஆண்களின் நிலையை வலுப்படுத்துவதாகவே உள்ளது என்று மண்டிரி என்ற ஓர் அரசு சாரா இயக்கம் ஏற்பாடு செய்த நிகழ்வில் உரையாற்றுகையில் பெர்சே இயக்கத்தின் முன்னாள் தலைவரான அம்பிகா இதனை வலியுறுத்தினார்.
மகளிரை ஒரு தனிப் பிரிவாக இயங்கும் போது, முடிவெடுப்பது மற்றும் உத்தரவுகள் பிறப்பிப்பது போன்றவற்றை ஆண்கள் தங்கள் கைகளில் எடுத்துக் கொள்கிறார்கள். ஆண்களும், பெண்களும் சமத்துவம் என்று வாதிடும் நாம், ஆட்சிக்கு வித்திடும் அரசியல் கட்சிகளில் மட்டும் மகளிருக்கென்று ஏன் ஒரு தனிப்பிரிவு என்று அம்பிகா வினவினார்.
மகளிர் என்றால், குடும்பம் மற்றும் குழந்தைகள் என்ற ஒரு வட்டத்திற்குள் இருக்க வேண்டுமா?
மகளிர் என்று கூறி, ஒரு தனிப்பிரிவு ஒதுக்கப்படுவது அரசியலில் பெண்களுக்கு சமமான அந்தஸ்தை வழங்காது என்பதை அம்பிகா கடுமையாக வாதிட்டார்.