கோத்தா கினபாலு, டிசம்பர்.20-
கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதி இடைத்தேர்தலில், பாரிசான் நேஷனல் சார்பில் தான் போட்டியிடப் போவதாக, மறைந்த டத்தோ ஶ்ரீ புங் மொக்தார் ராடினின் மகன் நாயிம் குர்னியாவான் தெரிவித்துள்ளார்.
தனது தந்தை தக்க வைத்திருந்த அத்தொகுதியில் போட்டியிட தன்னைத் தேர்வு செய்த பாரிசான் தலைவர் டத்தோ ஶ்ரீ அஹ்மாட் ஸாஹிட் ஹாமிடிக்கும் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.
இது வெறும் கட்சியின் தேர்வு மட்டுமல்ல எனக் குறிப்பிட்டுள்ள நாயிம், கினாபாத்தாங்கான் தொகுதி மக்களின் நம்பிக்கையும், எதிர்பார்ப்புகளும் இதில் அடங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கினாபாத்தாங்கான் தொகுதியில், நாயிம் குர்னியாவானை வேட்பாளராகக் களமிறக்குவது குறித்து அம்னோ உச்சமன்ற உறுப்பினர் அஹ்மாட் மஸ்லானும் நேற்று இரவு தனது முகநூல் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.
கோலாலம்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், ஸாஹிட் ஹாமிடி இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, கினாபாத்தாங்கான் தொகுதி இடைத்தேர்தலில், நாயிமை நிறுத்துவது குறித்துக் கருத்துத் தெரிவித்த ஸாஹிட், முன்பு ஒருமுறை புங் மொக்தார், அத்தொகுதியில் போட்டியிட தனது மகனுக்கு வாய்ப்பளிக்குமாறு கேட்டுக் கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.
கடந்த டிசம்பர் 5-ஆம் தேதி, சபா அம்னோ தலைவர் டத்தோ ஶ்ரீ புங் மொக்தார் ராடின் காலமானதையடுத்து, அவரது தொகுதியான கினாபாத்தாங்கான் நாடாளுமன்றம் மற்றும் லாமாக் சட்டமன்றம் ஆகிய தொகுதிகளுக்கு வரும் ஜனவரி 24-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.








