கெடா, நவ. 29-
கெடா மாநிலத்தில் ஜெலாபாங் பாடி Padi எனப்படும் நெற்களஞ்சியத்தை பாதுகாப்பதற்கும், அந்த ஒரு லட்சத்து 30 ஆயிரம் ஹெக்டர் நிலப்பரப்பளவைக் கொண்ட விவசாய நிலத்தை நிலைநிறுத்துவதற்கும் கெடா மாநில அரசு கோரிய 200 மில்லியன் ரிங்கிட் உதவித்தொகையை மத்திய அரசாங்கம் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று மாநில மந்திரி பெசார் சனூசி முகமட் நோர் கேட்டுக்கொண்டார்.
இது கெடா மாநில அரசாங்கத்தின் கோரிக்கையாக இருந்த போதிலும், இந்த கோரிக்கையை , பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் முன்னிலையில் மேன்மை தங்கிய கெடா சுல்தான், சுல்தான் சலேஹூடின் சுல்தான் பால்லிஷா விடுத்த கோரிக்கையாக இருப்பதால், இந்த விண்ணப்பத்தை மத்திய அரசாங்கம் தீவிரமாக பரிசீலிக்க வேண்டும் என்று மந்திரி பெசார் சனூசி வலியுறுத்தியுள்ளார்.
கெடா மாநில அரசின் இந்த விண்ணப்பத்தில் மத்திய அரசாங்கம் கையாண்டு வரும் அணுகுமுறை வருத்தம் அளிப்பதாக உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
கடந்த ஜுன் மாதம் 30 ஆம் தேதி இஸ்தானா அனாக் புக்கிட் அரண்மனையில் நடந்த சந்திப்பில் கெடா மாநில அரசு பல முறை கோரியை 200 மில்லியன் ஊக்க உதவித் தொகையை விரைந்து பரிசீலனை செய்து அங்கீரிக்குமாறு பிரதமர் முன்னிலையில் கெடா சுல்தான் கோரிக்கை விடுத்ததாக சனூசி தெரிவித்தார்.
நாட்டின் மொத்த உற்பத்தியில் 43 விழுக்காடு அரிசியை கெடா நெற்களஞ்சியத்தின் வாயிலாக மூடா விவசாய மேம்பாட்டு வாரியமான மாடா வழங்குவதாக சனூசி சுட்டிக்காட்டினார்.








