கோலாலம்பூர், செப்டம்பர்.19-
முன்னாள் பிரதமர் டான் ஶ்ரீ முகைதீன் யாசின் தலைமையிலான பெரிக்காத்தான் நேஷனலில் ஓர் உறுப்புக் கட்சியாக மஇகா இணைவதா? இல்லையா? என்பது குறித்து வரும் நவம்பர் மாதம் தீர்க்கமாக முடிவு எடுக்கப்படும் என்று அக்கட்சியின் தேசியத் துணைத் தலைவர் டத்தோ ஶ்ரீ எம். சரவணன் தெரிவித்துள்ளார்.
பெரிக்காத்தான் நேஷனல் விடுத்துள்ள அழைப்பை, ஏற்பதா? இல்லையா? என்பது குறித்து வரும் நவம்பர் மாதம் நடைபெறவிருக்கும் மஇகாவின் தேசிய பேராளர் மாநாட்டில் தீர்க்கமாக முடிவு எடுக்கப்படும் என்று தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோ ஶ்ரீ எம். சரவணன் குறிப்பிட்டார்.
பெரிக்காத்தான் நேஷனலின் உறுப்புக் கட்சியான பெர்சத்து மற்றும் பாஸ் விடுத்துள்ள அழைப்பு குறித்து முடிவெடுக்கும் அதிகாரம், கட்சியின் உயர் மட்டத் தலைவர்களுக்கு இல்லை. இது குறித்து தீர்க்கமாக முடிவு செய்யக்கூடியவர்கள், பொதுப் பேரவையில் பங்கேற்கும் பேராளர்களே என்று டத்தோ ஶ்ரீ சரவணன் விளக்கினார்.
பேராளர்களின் பெரும்பான்மையினரின் முடிவைப் பொருத்தே, பாரிசான் நேஷனலில் ஒரு பாரம்பரியக் கட்சியான மஇகாவின் எதிர்காலம் தீர்மானிக்கப்படும் என்று டத்தோ ஶ்ரீ சரவணன் குறிப்பிட்டார்.