மலாக்கா மாநிலத் தேர்தலில் போட்டியிடும் இளம் வேட்பாளர்களின் திறமையைக் குறைத்து மதிப்பிடாமல், புதிய தலைமுறையினருக்கு வாக்களித்து தலைமைத்துவத்தை நிரூபிக்க வாய்ப்பளிக்க வேண்டும் என இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் டாக்டர் முஹமட் தௌஃபிக் ஜொஹாரி கேட்டுக் கொண்டுள்ளார்.
மலாக்கா தேர்தலில் அதிகமான இளம் வேட்பாளர்கள் களமிறங்கியிருப்பது, இளைஞர்களிடையே அரசியல் மற்றும் நாட்டின் நிர்வாகத்தின் மீதான ஆர்வம் அதிகரித்திருப்பதைக் காட்டுவதாக அவர் குறிப்பிட்டார்.
வேட்பாளர்களின் வயதைவிட அவர்களின் திறமை, ஆற்றல் மற்றும் கொள்கைச் சிந்தனைகளுக்கே முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
கிளேபாங், குவாலா லிங்கி, ஆயர் மொலெக் ஆகிய தொகுதிகளில் இளம் வேட்பாளர்கள் போட்டியிடுவது, நாட்டின் அரசியலில் இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்கும் போக்கு வலுப்பெற்று வருவதற்கான எடுத்துக்காட்டு என்றும் அவர் தெரிவித்தார்.
சுங்கை பட்டாணி நாடாளுமன்ற உறுப்பினருமான அவர், புலாவ் காடோங் பொது குடியிருப்புப் பகுதியில் நடைபெற்ற இளைஞர் விளையாட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்தார்.
வேட்பாளர்களை வயதின் அடிப்படையில் மதிப்பிடாமல், அவர்களின் செயல்திறன் மற்றும் மக்கள் சேவையாற்றும் ஆற்றலின் அடிப்படையில் வாக்காளர்கள் முடிவெடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.








