மலாக்கா மாநிலத் தேர்தலில் இளம் தலைமுறையினருக்கு வாய்ப்பளித்துள்ள பக்காத்தான் ஹராப்பானின் முடிவை வாக்காளர்கள் ஆதரிக்க வேண்டுமென பிகேஆர் இளைஞர் பிரிவின் துணைத் தலைவர் சியூ சூன் மான் கேட்டுக் கொண்டார்.
கோலா லிங்கி தொகுதியில் 24 வயதான முஹமட் முக்லிசுல் முபின் ஜுலாசபியா, கிளேபாங் தொகுதியில் 26 வயதான ஃபார்ஸானா ஹயானி முஹமட் நாசீர், பெங்காலான் பத்து தொகுதியில் 31 வயதான ஜேசன் ஸீ-ஸி நாதன், அசஹான் தொகுதியில் 37 வயதான டெனிஷ் பாலசுப்ரமணியம் ஆகியோர் இளம் வேட்பாளர்களாகக் களமிறக்கப்பட்டுள்ளனர்.
இளைஞர்களிடம் தலைமைத்துவப் பொறுப்பை ஒப்படைப்பது துணிச்சலான முடிவு எனக் குறிப்பிட்ட சியூ சூன் மான், வேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் சவால்களையும் வாய்ப்புகளையும் புரிந்த இளம் தலைவர்கள் அரசியலில் இடம் பெறுவது அவசியம் என்றார்.
தாம் 31 வயதில் மிரி நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதையும், பின்னர் சுற்றுலா, கலை மற்றும் கலாசார அமைச்சின் துணை அமைச்சராக நியமிக்கப்பட்டதையும் அவர் சுட்டிக் காட்டினார்.
மேலும், கெஅடிலான் கட்சியின் மலாக்கா தேர்தல் வேட்பாளர்களில் 30 விழுக்காட்டினர் பெண்கள் என்பதும், அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை வலுப்படுத்தும் முயற்சியாகும் என்றார்.
18 வயது வாக்குரிமை மற்றும் தானியங்கி வாக்காளர் பதிவுக்குப் பின்னர், இளைஞர்களுக்கும் பெண்களுக்கும் உரிய அரசியல் பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.








