கோலாலம்பூர், டிசம்பர்.15-
கட்சியின் மத்திய செயலவையானது இறுதித் தீர்மானம் எடுக்கும் வரை, மஇகா, பாரிசான் நேஷனல் கூட்டணியிலேயே தொடரும் என அதன் தேசியத் துணைத் தலைவர் டத்தோ ஶ்ரீ எம். சரவணன் தெரிவித்துள்ளார்.
மஇகா-வானது பெரிகாத்தான் நேஷனல் கூட்டணியில் இணைவதற்கானச் சாத்தியக் கூறுகள் குறித்த ஊகங்கள் உட்பட, கட்சியின் அடுத்தக்கட்ட அரசியல் நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க விரைவில் உயர்மட்டக் குழு கூடவுள்ளதாகவும் சரவணன் குறிப்பிட்டுள்ளார்.
கூட்டணியை விட்டு விலகும் எந்த ஒரு கட்சியும், மீண்டும் கூட்டணியில் இணைய முடியாது என பாரிசான் நேஷனல் தலைவர் டத்தோ ஶ்ரீ அஹ்மாட் ஸாஹிட் ஹாமிடி நேற்று எச்சரிக்கை விடுத்த சில மணி நேரங்களில் சரவணன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இந்த விவகாரத்தை முழுமையாக மஇகா மத்தியச் செயலவையின் முடிவிற்கு விடுத்துள்ளதாகவும், இறுதித் தீர்மானம் எடுப்பதற்கு முன், பிரதிநிதிகளிடமிருந்து வரும் அனைத்து கருத்துகளையும் அவர்கள் கவனமாகப் பரிசீலிப்பார்கள் என்றும் சரவணன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், மஇகா மத்தியச் செயலவைக் கூட்டமானது அடுத்த மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.








