Apr 19, 2026
Thisaigal NewsYouTube
பிரதமர் பதவிக் காலத்தை 10 ஆண்டுகளாகக் கட்டுப்படுத்தும் சட்டத் திருத்தம் தோல்வி
அரசியல்

பிரதமர் பதவிக் காலத்தை 10 ஆண்டுகளாகக் கட்டுப்படுத்தும் சட்டத் திருத்தம் தோல்வி

Share:

கோலாலம்பூர், மார்ச்.02-

நாட்டில் பிரதமர் ஒருவரின் பதவிக் காலத்தை இரண்டு தவணைகள் அல்லது அதிகபட்சமாக 10 ஆண்டுகள் எனக் கட்டுப்படுத்தும் நோக்கில் கொண்டு வரப்பட்ட அரசியலமைப்பு சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்ற மக்களவையில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை ஆதரவைப் பெறத் தவறியதால் தோல்வியடைந்தது.

இன்று நடைபெற்ற இரண்டாம் வாசிப்பிற்கான வாக்கெடுப்பில், இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மசோதாவிற்கு ஆதரவாக 146 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே வாக்களித்தனர்.

மக்களவைத் தலைவர் டான் ஶ்ரீ ஜொஹாரி அப்துல் இந்த வாக்கெடுப்பு முடிவுகளை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். மொத்தம் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களில் 146 பேர் மசோதாவிற்கு ஆதரவு தெரிவித்த நிலையில், 44 உறுப்பினர்கள் வாக்களிக்காமல் நடுநிலை வகித்தனர். மேலும் 32 உறுப்பினர்கள் வாக்கெடுப்பின் போது அவைக்கு வரவில்லை.

அரசியலமைப்பில் திருத்தம் செய்வதற்கு மூன்றில் இரண்டு பங்கு என்ற அடிப்படையில் 148 உறுப்பினர்களின் ஆதரவு கட்டாயம் தேவை என்ற நிலையில், வெறும் இரண்டு வாக்குகள் வித்தியாசத்தில் இந்த மசோதா நிறைவேற்றப்படாமல் போனது.

இந்த மசோதா நிறைவேற்றப்பட்டிருந்தால், எதிர்காலத்தில் எந்தவொரு தனிநபரும் 10 ஆண்டுகளுக்கு மேல் பிரதமர் பதவியில் நீடிக்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கும். ஜனநாயகச் சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாகக் கருதப்பட்ட இந்த முயற்சி, போதிய ஆதரவு கிடைக்காததால் தற்காலிகமாகத் தடைபட்டுள்ளது.

இருப்பினும், இந்த வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாத மற்றும் நடுநிலை வகித்த உறுப்பினர்களின் நிலைப்பாடு அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related News