கோலாலம்பூர், டிச.12-
முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக், நாட்டின் பிரதமராக இருந்த போது, இந்திய சமுதாயத்தின் நல்வாழ்வுக்காக அவர் ஆற்றிய பணிகள், செய்த சேவைகள், வழங்கிய பங்களிப்புகளை நாம் எளிதில் மறந்து விட முடியாது என்று மஇகா தேசியப் பொருளாளர் டத்தோ என். சிவகுமார் தெரிவித்தார்.
இந்திய சமுதாயத்தின் மேன்மைக்காக பாடுபட்ட ஓர் உன்னத தலைவராக போற்றப்பட்ட நஜீப்பை நம்மில் சிலர் நன்றி பாராட்டுவதில்லை. குறிப்பாக, நஜீப்பின் பங்களிப்பை சில தரப்பினர் மறந்திருப்பது வருத்தம் அளிக்கிறது என்று சிவகுமார் குறிப்பட்டார்.
போஸ்கூ என்று மக்களால் அன்புடன் அழைக்கப்பட்ட நஜீப் இல்லாமல், நீண்ட காலமாக ஒரு வெறுமையுடன் சமுதாயம் சென்று கொண்டு இருப்பதை காண முடிகிறது என்று டத்தோ சிவகுமார் வர்ணித்தார்.
மலேசியப் பிரதமர்களில் இந்திய சமுதாயத்தின் மேன்மைக்காக, அவர்களை நாட்டின் தேசிய நீரோடையில் இணைப்தற்காக பாடுபட்ட தலைவர்களில் நஜீப் முன்னணி வகிக்கிறார் என்றால் அது மிகையாகாது என்று டத்தோ சிவகுமார் குறிப்பிட்டார்.
இந்திய சமுதாயத்தின் நலன், நல்வாழ்வு மற்றும் எதிர்காலம் ஆகியவற்றை முன்நிறுத்தி, இந்திய சமுதாயத்தின் வளப்பமிகுந்த எதிர்காலத்தை நோக்கி, ஓர் குறுகிய காலத்தில் அவர் முன்னெடுத்த திட்டங்களை இந்திய சமுதாயம் அவ்வளவு எளிதில் மறந்த விடக்கூடாது.
நஜிப் காலத்தில் இந்தியர்களின் சமூகவியல், பொருளாதார உருமாற்றத்திறக்காக 2017 ஆம் ஆண்டு அவர் முன்னெடுத்த பிரதான செயல்திட்டமான புளுபிரிண்ட், நடைமுறைப்படுத்தப்பட்டு இருக்குமானால் மலேசிய இந்திய சமுதாயம் தேசிய சமூகவியல், பொருளாதார நீரோடையில் குறிப்பிட்ட மைல்கல்லைத் தொட்டு இருப்பார்கள். ஒரு முக்கிய அடைவு நிலையை எட்டியிருப்பார்கள்.
அந்த அளவிற்கு நஜீப் முன்னெடுத்த அந்த புளுபிரிண்ட் திட்டம், இந்திய சமுதாயத்தின் மறுமலச்சிக்கான ஓர் உத்வேகத்தையும், புதிய நம்பிக்கையையும் ஏற்படுத்தியது. அதனால்தான், இந்திய சமுதாயத்தின் மேன்மைக்கு அவர் தீட்டிய திட்டங்களுக்கு நம்பிக்கை என்ற ஓர் ஒளி தீபத்தை ஏற்றினார் என்று மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து அமைப்புகளின் பேரவையான மஹிமாவின் தலைவருமான டத்தோ சிவகுமார் வர்ணித்தார்.
இந்திய சமுதாயத்திற்காக புளுபிரிண்ட் திட்டத்தை மட்டும் நஜீப் வரையவில்லை. மாறாக, அதனை அமல்படுத்துவதற்கான ஆக்கப்பூர்வமான செயல் திட்டங்களை முன்னெடுத்தார். அதற்கு செயல்வடிவமும் கொடுக்கவும் முற்பட்டோர்.
அந்த அளவிற்கு இந்திய சமுதாயத்தைப் பற்றி ஒரு தூரநோக்கு அடிப்படையில் சிந்தித்த தலைவர் , நஜீப்பைத் தவிர வேறுயாரும் இருக்க முடியாது என்று டத்தோ சிவகுமார் குறிப்பிட்டார்.
தற்போது சிறையில் இருந்து வரும் நஜிப், தம்முடைய எஞ்சிய 6 ஆண்டு கால சிறைத் தண்டனையை வீட்டுக்காவலில் வைப்பதற்கு ஓர் அரசாணைக்கான கூடுதல் உத்தரவு இருப்பதாக கூறப்படுகிறது.
அந்த அரசாணை தொடர்பாக நஜீப் தொடுத்துள்ள மேல்முறையீட்டு வழக்கு, அடுத்த ஜனவரி 6 ஆம் தேதி புத்ராஜெயா அப்பீல் நீதிமன்றத்தில் நடைபெறவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வழக்கில் சமுதாயத்தின் மேன்மைக்காக பாடுபட்ட நஜீப்பிற்கு நீதி கிடைக்கும், தர்மம் வெல்லும் என்ற நம்பிக்கையோடு காத்திருப்போம் என்று டத்தோ சிவகுமார் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.