Sep 23, 2026
Thisaigal NewsYouTube
அனல் பறக்கும் நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல்: காலை 10 மணி நிலவரப்படி 18.22 சதவிகித வாக்குகள் பதிவு, Klawang தொகுதி முன்னிலை
அரசியல்

அனல் பறக்கும் நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல்: காலை 10 மணி நிலவரப்படி 18.22 சதவிகித வாக்குகள் பதிவு, Klawang தொகுதி முன்னிலை

Share:

சிரம்பான், ஆகஸ்ட்.01-

16-வது நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலானது இன்று காலை 8 மணி தொடங்கி, மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 401 வாக்குச் சாவடிகளில் சுமூகமான முறையில் நடைபெற்று வருகின்றது.

தற்போதைய நிலவரப்படி மிதமான வானிலை நிலவி வந்த போதிலும், இன்று பிற்பகலில் மாநிலத்தின் பல பகுதிகளில் கனமழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என MetMalaysia எச்சரித்துள்ளது.

இந்நிலையில், இன்று காலை 10 மணி நிலவரப்படி 18.22 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இது, கடந்த 2023-ஆம் ஆண்டு நடைபெற்ற மாநிலத் தேர்தலில் இதே நேரத்தில் பதிவான 18.12 சதவீத வாக்குப் பதிவை விட சற்றே அதிகமாகும்.

காலை 10 மணி வரை Klawang தொகுதியில் அதிகபட்சமாக 21.5% வாக்குகள் பதிவாகி முன்னிலை வகித்து வருகின்றது.

அதனைத் தொடர்ந்து Seri Menanti தொகுதியில் 21.4 சதவிகித வாக்குகளும், Chennah தொகுதியில் 21.1 சதவிகித வாக்குகளும் பதிவாகியுள்ளன.

அதேவேளையில், Lukut தொகுதியில் 15.7 சதவகித வாக்குகளும், Gemas தொகுதியில் 16.3 சதவிகித வாக்குகளும், மற்றும் Chuah தொகுதியில் 16.7 சதவிகித வாக்குகளும் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மாநிலத்தின் 36 தொகுதிகளிலும் வாக்குப் பதிவானது இன்று மாலை 6 மணி வரை நடைபெறவுள்ள இந்த தேர்தலில், 8 லட்சத்து 59 ஆயிரத்து 760 பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

சுமார் 72 முதல் 75 சதவீதம் வரை வாக்குப்பதிவு பதிவாகும் என தேர்தல் ஆணையம் எதிர்பார்க்கும் நிலையில், அதிகாரப்பூர்வ முடிவுகள் இன்று இரவு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News