நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் டத்தோ இஸ்மாயில் லாசிம் மற்றும் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்கள், துவாங்கு நாட்ஸாருடின் துவாங்கு ஜஃபாரை நாளை புதன்கிழமை காலை சந்திக்கவுள்ளனர்.
துவாங்கு ஜஃபார் அரச மாளிகை அரங்கில் காலை 9 மணிக்கு நடைபெறும் இந்தச் சந்திப்பு, அறிமுகத்துடனும் நல்லுறவை வலுப்படுத்தும் நோக்கத்துடனும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சந்திப்பில் சர்ச்சைக்குரிய உண்டாங் யாங் எம்பாட், துங்கு பெசார் தம்பின் மற்றும் டத்தோ ஷாபண்டார் சுங்கை உஜோங் ஆகியோரும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, யாங் டிபெர்துவான் பெசார் துவாங்கு முஹ்ரிஸ் துவாங்கு முனாவிர், மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்களின் நியமனங்களை ரத்து செய்துள்ள போதிலும், அவர்கள் தொடர்ந்து வழக்கம்போல் பணியாற்றுவதாக மந்திரி பெசார் இஸ்மாயில் லாசிம் தெரிவித்துள்ளார்.
தற்போதைய ஆட்சிக்குழு உறுப்பினர்களின் பதவிகள் தொடர்ந்து செல்லுபடியாகும் என்ற நிலைப்பாட்டை அவர் ஏற்கனவே தெரிவித்துள்ள நிலையில், அவர்களது நியமனத்தை ரத்து செய்தது தொடர்பான அரசமைப்புச் சட்ட விளக்கத்தில் சர்ச்சை நீடிக்கிறது.








