மலாக்கா மாநிலத் தேர்தலை முன்னிட்டு பாதுகாப்புப் பணியில் மொத்தம் 3,150 போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளதாக அம்மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஸுல்கைரி முக்தார் தெரிவித்துள்ளார்.
இதில் வெளிமாநிலங்களில் இருந்து கூடுதலாக 1,500 போலீசார் வரவழைக்கப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தேர்தல் பாதுகாப்புக்கான பணிகள் மூன்று மாதங்களுக்கு முன்பே தொடங்கப்பட்டதையும், அதில் ஒத்திகைகள் மற்றும் பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
அதேவேளையில், ஏற்கனவே தேர்தல்களை நடத்தியுள்ள பிற மாநிலங்களின் அனுபவங்களும் பாதுகாப்புத் திட்டங்களும், இந்த தேர்தலில் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் ஸுல்கைரி முக்தார் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, தேர்தல் காலம் முழுவதும் சமூக ஊடகங்களைக் கண்காணிக்க மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையத்துடன் இணைந்து செயல்பட உள்ளதாகவும் ஸுல்கைரி குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக இனம், மதம் மற்றும் அரச குடும்பம் தொடர்பான 3R விவகாரங்களில் பொய்யான அல்லது அவதூறான தகவல்களை பொதுமக்கள் பரப்ப வேண்டாம் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
மலாக்கா மாநில சட்டமன்றம் இன்று செப்டம்பர் 23-ஆம் தேதி கலைக்கப்பட்டு, 16 ஆவது மாநிலத் தேர்தலுக்கு வழிவகுக்கிறது.
தேர்தல் நடைபெறும் காலத்தில் சட்டம்-ஒழுங்கையும் பாதுகாப்பையும் உறுதி செய்ய போலீசார் விரிவான முன்னேற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.








