மலாக்கா மாநில சட்டமன்றம் நாளை புதன்கிழமை கலைக்கப்படவுள்ள போதிலும், மாநில அரசின் நிர்வாகம் வழக்கம்போல் தொடர்ந்து செயல்படும் என முதலமைச்சர் டத்தோ ஶ்ரீ அப் ரவுஃப் யுசோ உறுதியளித்துள்ளார்.
சட்டமன்றம் கலைக்கப்பட்ட பின்னர், புதிய மாநில அரசு அமைக்கப்படும் வரை தற்போதைய அரசு காபந்து அரசாங்கமாகச் செயல்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
மக்களுக்கான சேவைகள், பொதுநலப் பணிகள், பாதுகாப்பு மற்றும் அன்றாட நிர்வாக நடவடிக்கைகளில் எந்தத் தடையும் ஏற்படாது என்றும், அனைத்து அரசு துறைகள், நிறுவனங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் தொடர்ந்து தங்களது பணிகளை மேற்கொள்ளும் என்றும் அவர் கூறினார்.
இதனிடையே, எதிர்வரும் மாநிலத் தேர்தலில் பாரிசான் நேஷனல் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் தற்போதைய வேட்பாளர்கள் தொடர்வார்களா என்ற கேள்விக்கு, பல்வேறு அம்சங்களை ஆராய்ந்த பின்னர் அது குறித்து அறிவிக்கப்படும் என அப் ரவுஃப் யுசோ தெரிவித்தார்.








