கோலாலம்பூர், நவம்பர்.10-
வரும் 16 ஆவது பொதுத்தேர்தலில் கெடா, பாடாங் செராய் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுவதைப் பற்றி தாம், இன்னும் சிந்திக்கவில்லை என்று உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
எனினும் கெடா மாநிலத்தை எதிர்க்கட்சியின் பிடியிலிருந்து மீட்பதற்கான முயற்சியில் தாம் முழு வீச்சில் ஈடுபட்டு இருப்பதை சைஃபுடின் ஒப்புக் கொண்டார்.
கெடா மாநிலத்தில் அலோர் ஸ்டார், கோல கெடா, பாடாங் செராய் மற்றும் கூலிம் ஆகிய மாவட்டங்களைப் பொருளாதார ரீதியாக வலுப்படுத்தும் முயற்சியில் தாம் இறங்கியுள்ளதாக சைஃபுடின் கூறினார்.
மக்களின் நலன், மாவட்டங்களில் மேம்பாடு ஆகியவற்றில் தாம் தீவிர கவனம் செலுத்தி வரும் அதே வேளையில் பிகேஆர் கட்சியை கெடா மாநிலத்தில் வலுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருவதால் அடுத்த பொதுத்தேர்தலில் தாம் போட்டியிடக்கூடிய தொகுதி குறித்து அதிகமாகச் சிந்திக்கவில்லை என்று சைஃபுடின் குறிப்பிட்டார்.
நேற்று முன் தினம் பாடாங் செராய் தொகுதியில் பிகேஆர் கட்சியின் தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பில் கலந்து கொண்டு பேசுகையில் சைஃபுடின் மேற்கண்டவாறு கூறினார்.
மலாய்க்காரர்கள், சீனர்கள், இந்தியர்கள் என ஒரு சேர ஒற்றுமையுடன் வாழ்ந்து வரும் இந்த நாட்டில், இத்தகைய ஒற்றுமையும், நல்லிணக்கமும், சகிப்புத்தன்மையும் நீடித்து நிலை பெற வேண்டும் என்று சைஃபுடின் தமது உரையில் வலியுறுத்தினார்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு எதிராக துருன் அன்வார் என்ற பெயரில் எதிர்க்கட்சியினர் முன்னெடுக்கும் முயற்சி வெற்றிப் பெறப் போவதில்லை என்பதையும் சைஃபுடின் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
பிரதமர் வாக்குறுதி அளித்ததைப் போல எண்ணெய் விலையைக் குறைத்து விட்டார். பூடி95 திட்டத்தின் வாயிலாக பெட்ரோல் ரோன் 95 விலையை லிட்டருக்கு ஒரு ரிங்கிட் 99 காசுக்குக் கொண்டு வந்து விட்டார். அதனை எதிர்க்கட்சியினரால் சகித்துக் கொள்ள முடியவில்லை என்று கெடா மாநில பக்காத்தான் ஹராப்பான் தலைவருமான சைஃபுடின் குறிப்பிட்டார்.








