கோத்தா கினபாலு, டிசம்பர்.02-
GRS கூட்டணி தலைமையில் அமைந்துள்ள ஒற்றுமை அரசாங்கத்தில், சபா ஜசெக எந்த ஒரு பதவியையும் ஏற்கப் போவதில்லை என அக்கட்சியின் பொதுச் செயலாளர் அந்தோணி லோக் தெரிவித்துள்ளார்.
நேற்று திங்கட்கிழமை இரவு, சபா சட்டமன்ற தேர்தல் முடிவுகள் குறித்து விவாதிக்க, அவசர மத்தியச் செயலவைக் கூட்டம் ஒன்று நடைபெற்றது.
அக்கூட்டத்தில் கலந்து கொண்ட அந்தோணி லோக், சபா வாக்காளர்களுக்கு ஜசெக மற்றும் பக்காத்தான் ஹராப்பான் மீதான அதிருப்தியையும், நம்பிக்கையையும் இந்த தேர்தல் முடிவுகள் தெளிவாகக் காட்டுவதாகத் தெரிவித்தார்.
பிரச்சாரக் காலங்களில் மக்களை நேரடியாகச் சந்தித்த போதே, அவர்களின் அதிருப்தியான மனநிலை குறித்து தலைவர்களும், வேட்பாளர்களும் நன்கு அறிந்திருந்தனர் என்றும் அந்தோணி லோக் குறிப்பிட்டார்.
அதே வேளையில், மக்களிடமிருந்து பெறப்பட்ட விமர்சனங்களைக் கருத்தில் கொண்டு, அடுத்த ஆறு மாதங்களில் அதனைச் சரி செய்ய பிரதமருடன் இணைந்து பணியாற்றுவோம் என அக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
மக்களின் நம்பிக்கையை மீண்டும் பெறும் வரையில், சபா அரசாங்கத்தில் எந்த ஒரு பதவியையும் ஜசெக ஏற்கப் போவதில்லை என்பதும் அக்கூட்டத்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.








