Jun 25, 2026
Thisaigal NewsYouTube
மத்திய கிழக்கு போர்நிறுத்தத்தில் லெபனானையும் உள்ளடக்குமாறு மலேசியா வலியுறுத்து / பொதுமக்கள் மீதான தாக்குதலுக்கு அன்வார் கடும் கண்டனம்
அரசியல்

மத்திய கிழக்கு போர்நிறுத்தத்தில் லெபனானையும் உள்ளடக்குமாறு மலேசியா வலியுறுத்து / பொதுமக்கள் மீதான தாக்குதலுக்கு அன்வார் கடும் கண்டனம்

Share:

மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் மோதலில் தற்காலிக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றில் லெபனானையும் உள்ளடக்குமாறு மலேசியா வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், லெபனான் பிரதமர் நவாப் சலாம் உடன் தொலைபேசி வாயிலாகப் பேச்சுவார்த்தை நடத்தியதாகத் தெரிவித்துள்ளார்.

இப்போரினால், லெபனான் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சுமார் 10 இலட்சம் மக்கள் இடம் பெயர்ந்துள்ளதாகவும், 1,000-திற்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், லெபனானின் இறையாண்மைக்கு மலேசியா ஆதரவு அளிப்பதை மீண்டும் உறுதிப்படுத்திய அன்வார், பொதுமக்கள் பயன்படுத்தும் அடிப்படை கட்டமைப்புகள் மீது நடைபெறும் தாக்குதல்களை வன்மையாகக் கண்டித்துள்ளார்.

அனைத்து தரப்பினரும் பதற்றத்தை குறைத்து, பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினையை தீர்க்க முன்வர வேண்டும் என்றும், மோசமடைந்து வரும் மனிதாபிமான சூழ்நிலையை உடனடியாக கவனிக்க வேண்டும் என்றும் அன்வார் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த மார்ச் 2-ஆம் தேதி, ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பு மேற்கொண்ட எல்லை தாண்டிய தாக்குதலுக்குப் பிறகு, இஸ்ரேல், தெற்கு லெபனானில் வான்வழி தாக்குதல்களையும், நிலத் தாக்குதல்களையும் மேற்கொண்டுள்ளது.

இந்த நடவடிக்கைகளால், அங்கு பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

லெபனான் அதிகாரிகள் வெளியிட்ட தகவலின்படி, இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களில் இதுவரை குறைந்தது 1,039 பேர் உயிரிழந்ததுடன், மேலும் 2,876 பேர் காயமடைந்துள்ளனர்.

Related News