கோலாலம்பூர், பிப்ரவரி.14-
பெர்சத்து கட்சியின் ஒற்றுமையைச் சீர்குலைத்து, தொடர் சதிவேலைகளில் ஈடுபட்டதால் கட்சியின் துணைத் தலைவரான டத்தோ ஶ்ரீ ஹம்ஸா ஸைனுடின் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக, அக்கட்சித் தலைவர் டான் ஶ்ரீ முகைதீன் யாசின் தெரிவித்துள்ளார்.
பெர்சத்து கட்சியின் நிலைத்தன்மையைக் காக்கவும், பிளவுகளைத் தடுக்கவும் இந்த முடிவை நல்லெண்ணத்தின் அடிப்படையிலேயே எடுத்ததாக அவர் விளக்கம் அளித்துள்ளார். கட்சியின் அரசியலமைப்புச் சட்டத்தின்படி, விசுவாசமான தொண்டர்களின் உணர்வுகளை மதிக்கவே இந்த இறுதி முடிவு எடுக்கப்பட்டுள்ளது என முகைதீன் ஆணித்தரமாகத் தெரிவித்துள்ளார்
"பெர்சத்து கட்சியின் தலைவர் மற்றும் நிறுவனர் என்ற முறையில், கட்சியை அதன் உண்மையான இலக்கை நோக்கி வழிநடத்த வேண்டிய பொறுப்பு எனக்கு உள்ளது. கட்சியின் தொடக்கத்திலிருந்தே என்னுடன் பயணித்த பலரைப் போலவே, பொறுப்பற்ற சில நபர்களால் கட்சி சீர்குலைக்கப்படுவதை என்னால் ஒரு போதும் அனுமதிக்க முடியாது.
பல ஆண்டுகளாக நான் நிதானமான அணுகுமுறையைக் கடைப்பிடித்ததோடு, என்னை எதிர்ப்பவர்களுக்குக் கூட கட்சியில் முக்கியப் பதவிகளை வழங்கினேன். ஆனால், எனது இந்த நற்பெயர் சார்ந்த முயற்சிகள் அவர்கள் தரப்பில் மதிக்கப்படவில்லை. இதனால், விசுவாசமான தொண்டர்களின் நலன் கருதியும், கட்சியின் ஒற்றுமையைக் காக்கவும் ஒழுங்குமுறை நடவடிக்கையை அமல்படுத்துவதே தற்போதையச் சூழலில் சிறந்த வழிமுறை என கட்சித் தலைமை ஒருமனதாக முடிவெடுத்துள்ளது," என்று முகைதீன் யாசின் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.








