கோலாலம்பூர், அக்டோபர்.28-
47 ஆவது ஆசியான் உச்சநிலை மாநாட்டுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வருகை, அந்த வல்லரவுக்கு, மலேசியா அடிபணிந்து விட்டதாக அர்த்தம் ஆகாது. மாறாக, மக்களின் நலனுக்காக அரச தந்திர உறவு மற்றும் பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவதற்கான வியூகம் நிறைந்த நடவடிக்கைக்கு அடித்தளமிட்டது என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெளிவுபடுத்தினார்.
தம்மை பொறுத்தவரை டிரம்புடனான நேரடிச் சந்திப்பு, மலேசியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான முதலீடு மற்றும் வார்த்தக வாய்ப்புகள் குறித்து விவாதிக்க முடிந்தது. அத்துடன் காஸாவில் மனிதாபிமானப் பிரச்னைகளில் மலேசியாவின் உறுதியான நிலைப்பாட்டை விளக்குவதற்கும், போர் நிறுத்ததத்தை வலியுறுத்துவதற்கும் ஒரு வாய்ப்பு கிடைத்தது என்று பிரதமர் குறிப்பிட்டார்.
அரச தந்திர உறவின் வாயிலாக டிரம்புடன் நேரடியாக அமர்ந்து பேசுவதற்கும், மலேசியாவின் உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கும் இந்த ஆசியான் மாநாட்டின் மூலம் ஒரு களமும், தளமும் நமக்குக் கிடைத்தது என்று டத்தோ ஶ்ரீ அன்வார் விளக்கினார்.
கோலாலம்பூரில் இன்று அக்டேபார் 28 ஆம் தேதியுடன் அதிகாரப்பூர்வமாக நிறைவு பெற்ற 47 ஆவது ஆசியான் உச்சநிலை மாநாட்டிற்குப் பிறகு நடத்தப்பட்ட செய்தியாளர்கள் கூட்டத்தில் ஆசியான் தலைவர் என்ற முறையில் டிரம்புடன் நடத்தப்பட்ட சந்திப்பு விவரங்களை அன்வார் விவரித்தார்.
காஸா மற்றும் மேற்குக்கரை மீதான தாக்குதல்களை தற்காலிகமாக நிறுத்துவதற்கு அமெரிக்கா ஒப்புக் கொண்டுள்ளது. இது டிரம்புடனான சந்திப்பின் நேர்மறை மாற்றங்களைக் காட்டுகிறது. ஆனால் ஒரு விரிவான தீர்வு எட்டப்படவில்லை என்று டத்தோ ஶ்ரீ அன்வார் விளக்கினார்.








