கோலாலம்பூர், டிசம்பர்.07-
அடுத்த பொதுத் தேர்தலில் நம்பிக்கைக் கூட்டணியுடன் இணைந்து செயல்படும் தனது நிலைப்பாட்டை அம்னோ உறுதிப்படுத்திய நிலையில், மசீச உடனடியாகப் தேசிய முன்னணியில் நீடிப்பதா இல்லையா என்பதை முடிவு செய்ய வேண்டும் என்று அம்னோவின் உச்சமன்ற உறுப்பினரான ஃபுவாட் ஸர்காஷி சவால் விடுத்துள்ளார். சபா மாநிலத் தேர்தலில் டிஏபி அடைந்த பின்னடைவைப் பயன்படுத்தி, சீனர்களின் ஆதரவைத் திரும்பப் பெற ஒரு தனிப் பாதையை அமைப்பதற்காகவே மசீச, டிஏபி- உடனான ஒத்துழைப்பை மறுக்கும் தீர்மானத்தை ஒரு சாக்காகப் பயன்படுத்துகிறது என்று ஃபுவாட் குற்றம் சாட்டினார்.
அம்னோ-வைப் பொறுத்தவரை, அடுத்தத் தேர்தலிலும் தேசிய முன்னணி தனது சொந்தச் சின்னத்தில் போட்டியிடும். ஆனால் நம்பிக்கைக் கூட்டணி, டிஏபி- உடனான ஒத்துழைப்பைத் தொடரும் என்ற நிலைப்பாடு தெளிவாக உள்ளது என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார். எனவே, தயங்காமல் கூட்டணியில் நீடிப்பதா அல்லது வெளியேறுவதா என்று மசீச ஒரு முடிவை எடுக்க வேண்டும் என்றும், அவர்களின் தீர்மானம் குறித்து அம்னோ கவலைப்படவில்லை என்றும் ஃபுவாட் பகிரங்கமாகக் கூறினார்.








