கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் கடந்த ஆறு ஆண்டுகளாக நடைபெற்று வந்த முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் சம்பந்தப்பட்ட 1எம்.டி.பி நிதி முறைகேடு வழக்கு விசாரணையை பிராசிகியூஷன் தரப்பினர் இன்று முடித்துக்கொண்டனர்.
230 கோடி வெள்ளி நிதி முறைகேடு சம்பந்தப்பட்ட இந்த வழக்கு விசாரணை உயர் நீதிமன்ற நீதிபதி டத்தோ கோலின் லோரென்ஸ் செகுய்ரா முன்னிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 28 ஆம் தேதி தொடங்கி 235 நாட்கள் நடைபெற்று வந்தது.
அரசு தரப்பு சாட்சியாக 50 பேர் அழைக்கப்பட்ட நிலையில் இவ்வழக்கில் பிராசிகியூஷன் தரப்பு, தனது விசாரணையை முடித்துக்கொள்வதாக துணை பப்ளிக் பிராசிகியூட்டர் அஹ்மத் அக்ரம் கரீப், நீதிமன்த்தில் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து பிராசிகியூஷன் தரப்பும், எதிர்தரப்பும் தங்களின் எழுத்துப்பூர்வமான வாதத் தொகுப்பை வரும் ஜுலை 26 ஆம் தேதிக்குள் சமர்பிக்குமாறு இரு தரப்பினரையும் நீதிபதி டத்தோ கோலின் லோரென்ஸ் செகுய்ரா கேட்டுக்கொண்டார்.








