பட்டர்வொர்த், டிசம்பர்.21-
தேசிய முன்னணி கூட்டணியில் நீடிப்பதா அல்லது வெளியேறுவதா என்பது குறித்து ம.இ.கா. உடனடியாகத் தெளிவான முடிவை எடுக்க வேண்டும் என அக்கூட்டணியின் தலைவர் டத்தோ ஶ்ரீ அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி மிகக் கடுமையான ‘கடைசி எச்சரிக்கை’ விடுத்துள்ளார்! தேசியக் கூட்டணியில் சேர ம.இ.கா. கடிதம் கொடுத்ததாகத் தகவல்கள் கசிந்துள்ள நிலையில், காலையில் ஒன்று மாலையில் ஒன்று எனப் பேசாமல் உண்மையுடன் இருக்குமாறு ஸாஹிட் ஹமிடி சீறியுள்ளார். தங்களின் தலைவிதி குறித்து ம.இ.கா.வால் தீர்க்கமான முடிவெடுக்க முடியாவிட்டால், தேசிய முன்னணி தலைமையே அதிரடியாக இறங்கி அவர்கள் குறித்த இறுதி முடிவை எடுக்கும் என அவர் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார்.
"நண்பர்களாக" இருக்கும் மலேசிய மக்கள் சக்தி கட்சி போன்ற கட்சிகளைத் தேசிய முன்னணியின் முக்கிய அங்கமாக மாற்றத் திட்டமிட்டு வருவதாகவும், துரோகத்தை விட விசுவாசமே தமக்கு முக்கியம் என்றும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். 51 ஆண்டு காலப் பாரம்பரியம் கொண்ட தேசிய முன்னணி தனது கூட்டணியை மறுசீரமைக்கப் போவதாகவும், இனி வளைந்து கொடுக்கப் போவதில்லை என்றும் ஸாஹிட் ஹமிடியின் இந்த அதிரடிப் பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!








