Apr 19, 2026
Thisaigal NewsYouTube
மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்
அரசியல்

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

Share:

கோலாலம்பூர், டிசம்பர்.20-

ஓர் உறுப்புக் கட்சியாக தொடர்ந்து இருப்பதா? இல்லையா? என்பது குறித்து இன்னும் தீர்க்கமாக முடிவு செய்யாமல் இருக்கும் மஇகாவின் தலைவிதி குறித்து அடுத்த ஜனவரி மாதம் நடைபெறவிருக்கும் பாரிசான் நேஷனல் உச்ச மன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் என்று அந்த கூட்டணியின் தலைவர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் ஸாஹிட் ஹாமிடி இன்று தெரிவித்துள்ளார்.

மஇகாவின் நிலை குறித்து பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று துணைப்பிரதமருமான அஹ்மாட் ஸாஹிட் குறிப்பிட்டார்.

எனினும் அடுத்த ஜனவரி மாதம் நடைபெறவிருக்கும் 2025 ஆம் ஆண்டுக்கான அம்னோ பேராளர் மாநாட்டின் நிகழ்ச்சி நிரலில் மஇகா விவகாரம் சேர்க்கப்படவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.

ஏனெனில், இது பாரிசான் நேஷனல் கூட்டணிக் கட்சிகள் சம்பந்தப்பட்ட விவகாரம் என்பதால், பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்திலேயே இவ்விவகாரம் விவாதிக்கப்பட்டு, தீர்மானிக்கப்படும் என்று அஹ்மாட் ஸாஹிட் தெளிவுபடுத்தினார்.

பாரிசான் நேஷனலில் ஓர் உறுப்புக் கட்சியாக இருக்கும் மஇகா, அதிலிருந்து வெளியேற வேண்டும் என்று தனது மாநில அளவிலான மாநாடுகளில் தீர்மானங்களை நிறைவேற்றியிருந்தாலும், ஆகக் கடைசியாக நடந்த அதன் 79 ஆவது தேசியப் பொதுப் பேரவையில் அந்த முடிவை ஒத்தி வைத்துள்ளது.

அது குறித்து மஇகா இன்னும் இறுதி முடிவெடுக்கவில்லை என்றாலும் பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்பட்டு தீர்க்கமாக முடிவு எடுக்கப்படும் என்று சிலாங்கூர், Sekinchan- னில் புறநகர்த் திட்டமான டேசா கிரானாவை அறிவித்தப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் அஹ்மாட் ஸாஹிட் இதனைத் தெரிவித்தார்.

பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டம் நடைபெறும் வரை, மஇகா-விற்கும் அம்னோவிற்கும் இடையிலான உறவு பாரிசான் நேஷனல் என்ற குடையின் கீழ் மாறாமல் அப்படியே நீடிக்கும் என்றும் அவர் கூறினார்.

சுருக்கச் சொன்னால், மஇகா, பாரிசான் நேஷனலில் நீடிக்குமா அல்லது வெளியேறுமா என்பது குறித்த அதிகாரப்பூர்வமான மற்றும் இறுதி முடிவு , வரும் ஜனவரி மாதம் நடைபெறும் பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்திற்குப் பிறகே தெரியவரும் என்று அவர் விளக்கினார்.

Related News