கோத்தா கினபாலு, நவம்பர்.09-
சபா மாநிலத்தின் 40 விழுக்காடு மத்திய வருவாய்க்கான உரிமைகள் குறித்த சட்டத்துறைத் தலைவரின் நிலைப்பாட்டைக் காரணம் காட்டி, தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சராக இருந்த எவோன் பெனெடிக் நேற்று இரவு பதவி விலகியுள்ளார். UPKO கட்சியின் தலைவரான இவர், மலேசிய ஒப்பந்தம் 1963ஐயும், சபா அரசியலமைப்பு உரிமைகளையும் நிலைநாட்டுவதே தனது கட்சியின் முக்கியக் கொள்கை என்பதை வலியுறுத்தினார். கோத்தா கினபாலு உயர்நீதிமன்ற நீதிபதியின் எழுத்துபூர்வத் தீர்ப்பை ஆய்வு செய்த பின்னர், சட்டத்துறைத் தலைவரின் நிலைப்பாடு மலேசிய உருவாக்கத்தின் வரலாற்று அடிப்படையைப் புறக்கணிப்பதாக உணர்ந்ததால், தான் அதை ஏற்க முடியவில்லை என அவர் தெரிவித்தார்.
மேலும், சட்டத்துறைத் தலைவர் என்பது பிரதமருக்கும் மத்திய அரசுக்கும் சட்ட ஆலோசகராக இருப்பதால், முரண்பட்ட நிலைப்பாட்டுடன் தான் அமைச்சரவையில் நீடிப்பது முறையற்றது என்று அவர் சுட்டிக் காட்டினார். கடந்த மூன்று ஆண்டுகளாக அமைச்சரவையில் இருந்த போது, 40 விழுக்காடு உரிமைகள் குறித்த சட்டத்துறைத் தலைவரின் அணுகுமுறைக்கும், UPKO தலைவரான தனது நிலைப்பாட்டிற்கும் மிகப் பெரிய வேறுபாடு இருந்ததாக அவர் பகிரங்கப்படுத்தினார். நாட்டின் உருவாக்க ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, சபாவின் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என்ற கொள்கைப் பிடிப்புக்காகவே தான் இந்தப் பதவியைத் துறப்பதாக எவோன் பெனெடிக் அறிவித்துள்ளார்.








