நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல் பிரசாரத்தின் போது ஒற்றுமை அரசாங்கத்தின் தலைவர்களை தனிப்பட்ட முறையில் தாக்கும் எண்ணம் தமக்கு இல்லை என்றும், பிரதமர் உத்தரவிட்டால் அமைச்சரவையில் இருந்து விலகத் தயாராக இருப்பதாகவும் வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ மொகமட் ஹசன் தெரிவித்துள்ளார்.
ரந்தாவ் தொகுதியில் போட்டியிடும் பாரிசான் நேஷனல் துணைத் தலைவருமான அவர், தாங்கள் மக்களிடம் தகவல்களைக் கொண்டு சேர்ப்பதில் மட்டுமே கவனம் செலுத்துவதாகவும், தனிப்பட்ட தாக்குதல்களில் ஈடுபடுவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
எனினும், பிரதமர் தன்னை அமைச்சரவையில் இருந்து விலகுமாறு உத்தரவிட்டால், அதற்கும் தான் தயாராக இருப்பதாகவும் மொகமட் ஹசன் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அமைச்சர்கள், துணை அமைச்சர்களை நியமிக்கும் அதிகாரம் பிரதமருக்கே இருப்பதால், அந்த விவகாரத்தில் இறுதி முடிவை எடுப்பதும் அவரே என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, மாநிலத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள அமைச்சர்கள், துணை அமைச்சர்கள் மற்றும் அரசாங்கத் துறைகளில் உள்ளவர்கள், யார் மீதும் தனிப்பட்ட தாக்குதல் நடத்தவோ, விமர்சிக்கவோ கூடாது என்று அன்வார் நேற்று எச்சரிக்கை விடுத்திருந்தார்.
அவ்வாறு தனிப்பட்ட தாக்குதல் நடத்துபவர்கள், அவர்களின் பதவிகளிலிருந்து விலக வேண்டும் என்றும் அன்வார் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.








