கூட்டரசு அரசாங்கத்தில் நீடிப்பதா இல்லையா என்பது குறித்து, வரும் ஆகஸ்ட் 16-ஆம் தேதி நடைபெறவுள்ள ஜசெக மாநாட்டில் பேராளர்கள் எடுக்கும் முடிவுக்கு தாம் முழுமையாகக் கட்டுப்படப் போவதாக கட்சியின் பொதுச்செயலாளர் அந்தோணி லோக் தெரிவித்துள்ளார்.
பிஎப்எம் 89.9 வானொலிக்கு அளித்த பேட்டியில், "தற்போதைய அரசாங்கத்தையும், அதில் தமது கட்சியின் பங்கையும் தற்காத்துத் தொடரவே தாம் விரும்புவதாகவும், இந்த பயணத்தைத் தொடர தமக்கு கட்சியின் பேராளர்களின் அங்கீகாரம் தேவை," என்றார்.
இந்த விவகாரம் குறித்து மாநாட்டில் பங்கேற்கும் 3,000 முதல் 4,000 பேராளர்கள் ரகசிய வாக்கெடுப்பு மூலம் இறுதி முடிவு எடுப்பார்கள். கட்சித் தலைமை விரும்பும் நிலப்பாட்டிற்கு எதிராக இந்த முடிவு அமைந்தாலும், அதனை தாம் மதிப்பார் என்று போக்குவரத்து அமைச்சருமான அந்தோணி லோக் கூறினார்.
அரசாங்கத்தில் பதவிகளை வகித்துக் கொண்டு, எதிர்க்கட்சியைப் போல ஜசெக செயல்பட முடியாது என்பதை உறுப்பினர்கள் உணர வேண்டும். அரசாங்கத்தில் தங்களது கடமை நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதே தவிர, பழையபடி ஆக்ரோஷமாக பேச வேண்டும் என நினைத்தால், மீண்டும் எதிர்க்கட்சி வரிசைக்குச் செல்ல தயாராக இருக்க வேண்டும் என்றும் அந்தோணி லோக் சுட்டிக்காட்டினார்.
மேலும், ஆகஸ்ட் 1-ஆம் தேதி நடைபெறவுள்ள நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல் முடிவுகள், நடைபெறவிருக்கும் மாநாட்டில் பேராளர்களின் முடிவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.








