பெட்டாலிங் ஜெயா, ஜனவரி.07-
பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் அடுத்த தலைவராகத் திரெங்கானு மந்திரி பெசார் டத்தோ ஶ்ரீ டாக்டர் அகமட் சம்சூரி மொக்தார் நியமிக்கப்படலாம் என்ற யூகங்கள் வலுவடைந்து வருகிறது.
பெர்சாத்து (Bersatu) கட்சித் தலைவரும் முன்னாள் பெரிக்காத்தான் நேஷனல் தலைவருமான டான் ஶ்ரீ முகைதீன் யாசின், திரெங்கானு மந்திரி பெசார் அகமது சம்சூரியைச் சந்தித்துப் பேசிய புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. முகைதீன் யாசின் லண்டனிலிருந்து திரும்பிய பிறகு இந்தச் சந்திப்பு நிகழ்ந்துள்ளது.
இந்தச் சந்திப்பு பாஸ் கட்சியின் தலைவர் டான் ஶ்ரீ அப்துல் ஹாடி அவாங் கொடுத்த அங்கீகாரத்தின் அடிப்படையிலேயே நடந்ததாக பாஸ் தலைவரின் அரசியல் செயலாளர் முஹமட் ஷாஹிர் சுலைமான் உறுதிப்படுத்தியுள்ளார்.
முகைதீன் யாசின் கடந்த ஜனவரி 1-ஆம் தேதி பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் பதவியிலிருந்து விலகினார். அதனைத் தொடர்ந்து, கூட்டணியை வழிநடத்தும் பொறுப்பை பாஸ் கட்சி ஏற்கும் என்று ஹாடி அவாங் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், பாஸ் கட்சியின் உதவித் தவைரான டாக்டர் அகமட் சம்சூரி மொக்தாரின் பெயரும், கெடா மந்திரி பெசார் டத்தோஸ்ரீ ஶ்ரீ முகமது சனுசி நோர் ஆகியோரின் பெயரும் அடிபட்டன. இருப்பினும், சனுசி நோர் தனக்கு அந்தப் பதவி வேண்டாம் என்றும், சம்சூரியே அதற்குத் தகுதியானவர் என்றும் பரிந்துரைத்துள்ளார்.








