கோலாலம்பூர், நவ. 23-
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான மடானி அரசாங்கத்தின் இரண்டாம் ஆண்டு நிறைவுவிழா கொண்டாட்டத்தையொட்டி மக்கள் கலந்து கொள்ளும் வகையில் கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் பல்வேறு சிறப்பு நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
நேற்று வெள்ளிக்கிழமை தொடங்கிய மடானி அரசாங்கத்தின் இரண்டாம் ஆண்டு நிறைவு விழா கொண்டாட்ட மாநாட்டு மையத்தில் அதிகமான வருகையாளர்களின் கவன ஈர்ப்பாக சாலை போக்குவரத்து இலாகாவான JPJ மற்றும் கல்வி அமைச்சு ஆகியவற்றின் முகப்பிடங்கள் அமைந்துள்ளன என்று அரசாங்கப் பேச்சாளர் ஃபாஹ்மி ஃபாட்ஸில்l தெரிவித்தார்.

JPJ முகப்பிடங்களில் மோட்டார் சைக்கிள் தலைக்கவசத்தை இலவசமாக மாற்றிக்கொள்வது மற்றும் கல்வி அமைச்சு முகப்பிடங்களில் எஸ்.பி.எம். அல்லது இதர தேர்வு சான்றிதழ்களை வெறும் பத்து வெள்ளிக் கட்டணத்தில் மாற்றிக்கொள்ளும் சேவைகள் மக்களின் மிகுந்த கவன ஈர்ப்பாக மாறியுள்ளது என்று ஃபாஹ்மி குறிப்பிட்டார்.

இது மடானி அரசாங்கத்தின் மகத்துவமான இரண்டாம் ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டமாக இருந்த போதிலும் மக்களின் சேவையில் தன்னை அர்ப்பணித்துக்கொண்ட ஒரு அரசாங்கம் என்ற முறையில் மக்கள் சேவை தொடர்புடைய அதிகமான முகப்பிடங்கள் கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் திறக்கப்பட்டுள்ளதாக தொடர்புத்துறை அமைச்சரான ஃபாஹ்மி தெரிவித்தார்.








