ஷா ஆலாம், ஜனவரி.24-
பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியில் அதிகாரப்பூர்வமாக இணைவது குறித்து ஆலோசிக்க ம.இ.கா ஒரு கூட்டத்தைக் கூட்டவுள்ளதாக அக்கட்சியின் தேசியத் தலைவர் எஸ்.ஏ. விக்னேஸ்வரன் இன்று தெரிவித்துள்ளார்.
ம.இ.காவின் விண்ணப்பத்திற்கு பெரிக்காத்தான் நேஷனல் ஏற்கனவே ஒப்புதல் அளித்திருந்தாலும், இது குறித்து கட்சிக்குள் விவாதிக்கப்பட உள்ளது என்று டான் ஶ்ரீ விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.
இன்று புக்கிட் கெமுனிங்கில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் செய்தியாளர்களிடம் பேசிய டான் ஶ்ரீ விக்னேஸ்வரன், விரைவில் இந்தக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கவுள்ளதாகக் கூறினார்.
எனினும், இதற்கான குறிப்பிட்ட தேதியை அவர் அறிவிக்கவில்லை. பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியில் இணைவது குறித்து கட்சியின் மத்திய செயற்குழுவுடன் தாம் கலந்து ஆலோசிக்கவிருப்பதாகவும், மிக விரைவில் தாங்கள் ஒன்று கூடி, அந்தத் தேதியை அறிவிக்கவிருப்பதாக டான் ஶ்ரீ விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
கடந்த வியாழக்கிழமை, பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் முன்னாள் தலைவர் டான் ஶ்ரீ முகைதீன் யாசின் பேசுகையில், ம.இ.காவின் விண்ணப்பத்திற்கு கூட்டணி ஒப்புதல் அளித்துள்ளதை உறுதிப்படுத்தினார். கடந்த ஆண்டே ம.இ.காவை இணைத்துக் கொள்ள பெரிக்காத்தான் நேஷனல் சம்மதித்ததாகவும், கட்சியின் அடுத்தக் கட்ட நடவடிக்கைக்காகக் காத்திருப்பதாகவும் முகைதீன் தெரிவித்திருந்தார்.








