சுபாங், நவம்பர்.03-
மலேசிய மாமன்னர் மாட்சிமை தங்கிய சுல்தான் இப்ராஹிம், இன்று திங்கட்கிழமை காலை அரசு முறைப் பயணமாக சவூதி அரேபியாவிற்குப் புறப்பட்டார்.
மறைந்த சுல்தான் அஹ்மாட் ஷா, கடந்த 1984-ஆம் ஆண்டு மேற்கொண்ட பயணத்திற்குப் பிறகு, அரசு முறைப் பயணம் மேற்கொள்ளும் முதல் மன்னர் சுல்தான் இப்ராஹிம் ஆவார்.
இந்நிலையில், மாமன்னர் பயணிக்கும் சிறப்பு விமானம் இன்று காலை 9 மணியளவில் சுபாங் வான்படைத் தளத்திலிருந்து புறப்பட்டது.
மாமன்னருக்கு விடை அளிக்கும் நிகழ்வில், துணை பிரதமர் டத்தோ ஶ்ரீ ஃபடில்லா யூசோஃப், வெளியுறவு அமைச்சர் டத்தோ ஶ்ரீ முகமட் ஹசான், தகவல் தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபாமி ஃபாட்சீல் உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இப்பயணத்தில், மாமன்னருடன் அவரது புதல்வர்களும், தற்காப்பு அமைச்சர் டத்தோ ஶ்ரீ முகமட் காலிட் நோர்டினும் பயணிக்கின்றனர்.
சவுதிப் பயணத்திற்குப் பிறகு, வரும் நவம்பர் 6-ஆம் தேதி, பாஹ்ரேன் அரசர் ஹமாட் இசா அல்-கலிஃபாவின் அழைப்பை ஏற்று, மாமன்னர் பாஹ்ரேன் செல்கிறார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.








