கோலாலம்பூர், டிசம்பர்.30-
பெர்லிஸ் மாநிலத்தின் புதிய மந்திரி பெசார் அபு பாக்கார் ஹம்ஸா தலைமையிலான மாநில ஆட்சிக் குழுவில் இடம் பெறப் போவதில்லை என பாஸ் கட்சி அறிவித்துள்ளது.
இந்த முடிவானது, முன்னாள் மந்திரி பெசார் ஷுக்ரி ரம்லிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், ஒற்றுமையின் அடையாளமாக எடுக்கப்பட்டதாக பாஸ் கட்சியின் பொதுச் செயலாளர் தக்கியுடின் ஹசான் தெரிவித்துள்ளார்.
அதே வேளையில், 15-ஆவது பொதுத் தேர்தலில் மக்கள் வழங்கிய ஆதரவிற்கு மதிப்பளித்து, பெர்லிஸ் மாநில அரசாங்கத்தில் பாஸ் கட்சி தொடர்ந்து தனது பங்களிப்பையும், இருப்பையும் உறுதிச் செய்யும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பெர்லிஸ் மாநிலத்தில் அண்மையில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில், பாஸ் கட்சியின் இந்தத் தீர்மானம் பெர்லிஸ் அரசியல் சூழலில் முக்கியத் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
பாஸ் கட்சி சார்பில் இந்த நடவடிக்கையானது எடுக்கப்பட்டாலும் கூட, மாநில அரசின் நிலைத்தன்மைக்கு தொடர்ந்து உறுதுணையாக இருப்போம் என்றும் தக்கியுடின் ஹசான் குறிப்பிட்டுள்ளார்.
அதே வேளையில், பெரிகாத்தான் கூட்டணியில் உள்ள அனைத்து தரப்பினரும், அண்மையில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்களைச் சிந்தித்து, அதிலிருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.








