புத்ராஜெயா, நவ.13-
தொழில் சர்ச்சைகளை தீர்வை காணும் நடுவர் மன்றமாக செயல்படும் தொழில் நீதிமன்றத்தின் தலைவர்களாக மூவர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தொழில் நீதிமன்றத்தின் தலைவர்களாக ஒப்பந்த அடிப்படையில் ஜெயசீலன் தி. அந்தோணி, திருமதி வனிதாமணி சிவலிங்கம் மற்றும் அருண்குமார் கணேசன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக மனித வள அமைச்சு வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தொழிலாளர் தொடர்புடைய சட்டங்களில் பரந்த அனுபவத்தை கொண்டுள்ள இந்த மூவரும் தொழில் நீதிமன்றத் தலைவர்களாக நியமிக்கப்ப்டடு இருப்பது மூலம் தொழில் சர்ச்சை தொடர்புடைய விவகாரங்களில் நீதி கிடைப்பதற்கு எடுத்துக்கொள்ளப்படும் காலக்கெடு குறைக்கப்படும் என்று மனித வள அமைச்சர் ஸ்டீவன் சிம் தெரிவித்தார்.
தவிர இவர்களின் நியமனத்தின் மூலம் தொழில் நீதிமன்றம் மற்றும் ஆள் பல நீதிமன்றம் ஆகியவற்றில் நிலுவையில் இருந்து வரும் வழக்குகளின் எண்ணிக்கை குறைக்கப்படும் என்பதுடன் இரு நீதிமன்றங்களின் சேவைத் தரமும் உயர்வதற்கு வழிவகுக்கும் என்று அமைச்சர் ஸ்டீவன் சிம் நம்பிக்கை தெரிவித்தார்.
தொழில் நீதிமன்றத் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ள ஜெயசீலன் அந்தோணி, வனிதாமணி சிவலிங்கம் மற்றம் அருண்குமார் கணேசன் ஆகியோருக்கான பதவி நியமன கடிதங்களை வழங்கும் நிகழ்வில் அமைச்சர் ஸ்டீவன் சிம் இதனை தெரிவித்தார்.
இதில் சிறப்பு அம்சமாக 45 வயதுடைய அருண்குமார் கணேசன், தொழில் நீதிமன்றத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டு இருப்பதையும் ஸ்டீவன் சிம் சுட்டிக்காட்டினார்.
மலேசிய தொழில் நீதிமன்றத்தின் நடப்பு வரலாற்றில் இளம் தலைவர் ஒருவர், தொழில் நீதிமன்ற தலைவராக நியமிக்கப்பட்டு இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
சட்டத்துறை தலைவராக நியமிக்கபட்டு, தற்போது கூட்டரசு நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டு இருக்கும் டான்ஸ்ரீ அகமட் தெர்ரிருடின் முகமட் சலோ, கடந்த 2007 ஆம் ஆண்டில் தனது 39 ஆவது வயதில் தொழில் நீதிமன்ற தலைவராக நியமிக்கப்பட்ட இளம் தலைவர் ஆவார் என்பதையும் அமைச்சர் ஸ்டீவன் சிம் நினைவுகூர்ந்தார்.








