கோலகுபு பாரு சட்டமன்ற உறுப்பினராக தாம் தேர்ந்தெடுக்கப்பட்டால், உலு சிலாங்கூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கோலகுபு பாரு, அதிக வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரக்கூடிய பொருளாதார வளர்ச்சிப் பகுதியாக உருவாக்கப்படும் என்று அத்தொகுதியில் மூடா கட்சியின் வேட்பாளராக போட்டியிடும் டாக்டர் ரா.சிவபிரகாஷ் உறுதியளித்துள்ளார்.
கடந்த 3 ஆண்டு காலமாக உலு சிலாங்கூர் நாடாளுமன்ற தொகுதியின் மூடா கட்சி ஒருங்கிணைப்பாளராக தாம் சேவையாற்றி வந்துள்ளதால், கோலகுபு பாரு தொகுதி மக்களின் தேவைகள் யாவை என்பதை கண்டறிந்துள்ளாதாக ஒரு கல்விமானான டாக்டர் ரா.சிவபிரகாஷ் குறிப்பிட்டார்.
கோலகுபு பாரு தொகுதியில் உள்ள பி40 தரப்பைச் சார்ந்த குடும்பங்களில் பிள்ளைகளுக்கு தரமான கல்வி உட்பட 5 அம்ச திட்டங்களை உள்ளடக்கிய தேர்தல் கொள்கை அறிக்கையை தாம் வெளியிட்டுள்ளதாக மூடா கட்சியின் சிலாங்கூர் மாநில துணைத் தலைவரான டாக்டர் ரா.சிவபிரகாஷ் தெரிவித்தார்.
கோலகுபு பாரு மக்களின் எதிர்கால நலனை முன்னிறுத்தி தாம் வரைந்துள்ள இந்த 5 அம்ச திட்டங்கள் மக்களின் வாழ்வியல் தரத்தை உயர்த்தும் என்று டாக்டர் ரா.சிவபிரகாஷ் திட்டவட்டமாக தெரிவித்தார்.








