கோலாலம்பூர், டிசம்பர்.30-
பெரிகாத்தான் நேஷனல் கூட்டணியின் பொதுச் செயலாளர் டத்தோ ஶ்ரீ முஹமட் அஸ்மின் அலி தனது பதவியிலிருந்து விலகுவதாக இன்று அறிவித்துள்ளார்.
இன்று காலை, அக்கூட்டணியின் தலைவர் பொறுப்பிலிருந்து, டான் ஶ்ரீ முகைதீன் யாசின் விலகியதையடுத்து, அஸ்மின் அலியின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதே வேளையில், பெரிகாத்தான் கூட்டணியின் சிலாங்கூர் மாநிலத் தொடர்புக் குழுத் தலைவர் பதவிலியிலிருந்தும் தாம் விலகுவதாக அஸ்மின் அலி தெரிவித்துள்ளார்.
கடந்த 2024-ஆம் ஆண்டு, டிசம்பர் 10-ஆம் தேதி முதல், அஸ்மின் அலி பெரிகாத்தான் கூட்டணியின் பொதுச் செயலாளராகப் பதவி வகித்து வந்தார்.
இந்நிலையில், தனது பதவி விலகலானது வரும் ஜனவரி 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அஸ்மினுக்கு முன்னதாக, ஜோகூர் பெரிகாத்தான் கூட்டணியின் தலைவர் டத்தோ டாக்டர் சாஹ்ருடின் ஜமால் தனது பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.
பெர்லிஸ் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பம் காரணமாக, பெர்சாத்து மற்றும் பாஸ் கட்சிகளுக்கு இடையில், கடந்த வாரம் முதல் கடுமையான கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளன.
பெர்லிஸ் மாநில முன்னாள் மந்திரி பெசார் முஹமட் ஷுக்ரி ரம்லி, உடல்நிலை சரியில்லாத காரணத்தால், பதவி விலகியதையடுத்து, புதிய மந்திரி பெசாராக அபு பாக்கார் ஹம்ஸா கடந்த ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றார்.
இந்நிலையில், நிலவி வரும் அரசியல் குழப்பத்துக்கு பெர்சாத்து கட்சியே காரணம் என சில பாஸ் தலைவர்கள் குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து, முகைதீனுக்கு எதிராகக் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இதன் காரணமாக முகைதீன், பதவி விலகும் முடிவை எடுத்துள்ளதாக நம்பப்படுகின்றது.
இதனிடையே, ஷுக்ரிக்கு ஆதரவளிக்கும் விதமாக, பாஸ் கட்சியைச் சேர்ந்த சில ஆட்சிக் குழு உறுப்பினர்களும் பதவி விலகுவதாக பாஸ் பொதுச் செயலாளர் தக்கியுடின் ஹசான் தெரிவித்துள்ளார்.








