பினாங்கு, நவ. 26-
இந்துக்கள் பெருவாரியாக கொண்டாடுகின்ற தீபாவளி திருநாளுக்கு பினாங்கு மாநிலத்தில் இரண்டு நாள் விடுறை வழங்குவது மீதான பரிந்துரை குறித்து ஆய்வு மேற்கொள்ள பினாங்கு அரசாங்கம் தயாராக இருப்பதாக மாநில முதலமைச்சர் சோவ் கோன் இயோவ் தெரிவித்துள்ளார்.
தற்போதைக்கு தீபாவளி பணிக்கைக்கு ஒரு நாள் மட்டுமே விடுமுறை வழங்கப்படுவதற்கு அரசு பதிவேட்டில் வகை செய்யப்பட்டுள்ளதாக சோவ் கோன் இயோவ் குறிப்பிட்டார்.
பொது விடுறைக்கு அப்பாற்பட்ட நிலையில் கூடுதலாக ஒரு சிறப்பு விடுமுறை வழங்கப்படுவதற்கு தீபகற்ப மலேசியாவில் 1951 ஆம் ஆண்டு பொது விடுமுறை சட்டம், பினாங்கு அரசாங்கத்திற்கு சிறப்பு அதிகாரம் வழங்குவதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஆனால், தற்போதைக்கு தீபாளிக்கு கூடுதலாக ஒரு சிறப்பு விடுமுறையை வழங்குவதற்கு மாநில அரசாங்கம் உத்தேசிக்கவில்லை. அதேவேளையில் அப்படியொரு பரிந்துரை சமர்ப்பிக்கப்பட்டால் அது குறித்து ஆய்வு மேற்கொள்ளவும், பரிசீலனை செய்யவும் பினாங்கு அரசு தயாராக இருப்பதாக இன்று பினாங்கு சட்டமன்றத்தில் பக்காத்தான் ஹராப்பான், பகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் குமரன் கிருஷ்ணன் கேள்விக்கு பதில் அளிக்கையில் சோவ் கோன் இயோவ் மேற்கண்டவாறு தெரிவித்தார்.








