கோலாலம்பூர், நவம்பர்.25-
பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமின் மூத்த அரசியல் செயலாளர் ஷாம்சுல் இஸ்கண்டார் முகமட் அகின் இன்று பதவி விலகியுள்ளார். தம்மால், மடானி அரசாங்கத்தின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படக்கூடாது என்பதற்காக பதவி விலகுவதாக சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் ஷாம்சுல் தெரிவித்துள்ளார்.
சபாவில் சுரங்க நடவடிக்கை ஊழல் தொடர்பில் ஒரு வர்த்தகரான ஆல்பெர்ட் தேய், 6 லட்சத்து 29 ஆயிரம் ரிங்கிட்டிற்கும் அதிகமான தொகையைப் பிரதமரின் மூத்த அரசியல் செயலாளர் ஷாம்சுலிடம் வழங்கியதாக கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு பகிரங்கமாக அறிவித்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அத்துடன் மருத்துவமனைத் திட்டம் ஒன்று தொடர்பில் குத்தகையாளர் ஒருவருக்கு சிபாரிசு கடிதம் ஒன்றையும் தனிப்பட்ட முறையில் ஷாம்சுல் வழங்கியதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அவர் பதவி விலக வேண்டும் என்று கடந்த இரண்டு மூன்று தினங்களாக அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது.








