நெகிரி செம்பிலான் மாநிலச் சட்டமன்றத் தேர்தல் ஆகஸ்ட் 1-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், மாநிலத்தின் எதிர்காலம் மற்றும் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான நிர்வாகத்தின் திசையைத் தீர்மானிக்க அனைத்துத் தகுதியான வாக்காளர்களும், குறிப்பாக மாநிலத்திற்கு வெளியே வசிப்பவர்கள் மற்றும் பணிபுரிபவர்கள் சொந்த ஊருக்குத் திரும்பி வாக்களிக்குமாறு நெகிரி செம்பிலான் சீன அசெம்பிளி மண்டபம் கேட்டுக் கொண்டுள்ளது.
பொருளாதாரம், வேலைவாய்ப்பு, கல்வி, சுகாதாரம், உள்கட்டமைப்பு மற்றும் பொதுப்பாதுகாப்பு போன்ற முக்கிய அம்சங்களை இந்தத் தேர்தல் நிர்ணயிக்கும் என்பதால், வாக்காளர்கள் அனைவரும் தவறாமல் சொந்த ஊருக்குத் திரும்பி, வாக்களிப்பது மிகவும் அவசியமென்று அது சுட்டிக்காட்டியுள்ளது.
முந்தைய அரசாங்கத்தின் செயல்பாடுகளை மதிப்பிட்டு, உண்மைகள் மற்றும் மாநிலத்தின் நீண்டகால நலனைக் கருத்தில் கொண்டு வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 36 தொகுதிகளுக்கு நடைபெறும் இத்தேர்தலில் 8,89,490 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதிய பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.








