இளைஞர், விளையாட்டுத்துறை அமைச்சர் ஹன்னா யோவ்- வின் கணவர் ராமச்சந்திரன் முனியாண்டியுடன் தொடர்புபடுத்தப்பட்ட Asia Mobility Technologies Sendirian Berhad- நிறுவனத்திற்கு சிலாங்கூர் மாநில அரசின் டி.ஆர்.டி திட்டத்தை அமல்படுத்தப்படுவதற்கான எந்தவொரு குத்தகையும் இன்னும் வழங்கப்படவில்லை என்று தொடர்புத்துறை அமைச்சர் ஃபாமி ஃபட்சில் இன்று தெளிவுபடுத்தியுள்ளார்.
இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்,இவ்விவகாரம் தொட்டு பேசியதாக அரசாங்கப் பேச்சாளரான ஃபாமி ஃபட்சில் குறிப்பிட்டார்.
அபாட் எனப்படும் தரைமார்க்க பொது போக்குவரத்து ஏஜென்சி, ஹன்னா யோவ் கணவர் சம்பந்தப்பட்ட Asia Mobility Technologies Sendirian Berhad- நிருவனத்திற்கு லைசென்ஸ் மட்டுமே வழங்கியுள்ளது.
APAD குத்தகையை பெறுவதற்கு முன்னதாக, அதன் திறனாற்றலை நிரூபிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதே தவிர சிலாங்கூர் மாநிலத்தின் எந்தவொரு குத்தகையும் அந்த நிறுவனத்திற்கு இன்னும் வழங்கப்படவில்லை என்று இன்றைய அமைச்சரவைக்கூட்டத்தில் பிரதமர் தெளிவுபடுத்தியுள்ளதாக Fahmi Fadzil தெரிவித்தார்.
டி.ஆர்.டி முன்னோடித் திட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இரண்டு நிறுவனங்களில் அமைச்சர் ஹன்னா யோவின் கணவர் ராமச்சந்திரன் முனியாண்டி தலைமை செயல்முறை அதிகாரியாக இருக்கும் Asia Mobility Technologies Sendirian Berhad- நிறுவனமும் ஒன்றாகும்.
இந்த இரண்டு நிறுவனங்களும் தரைமார்க்க போக்குவரத்து ஏஜென்சியான APAD- டினால் அங்கீகரிக்கப்பட்டு, லைசென்ஸ் வழங்கப்பட்ட நிறுவனங்களாகும்.
அதன் அடிப்படையிலே அந்த இரண்டு நிறுவனங்களும் டி.ஆர்.டி முன்னோடித் திட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதே தவிர இன்னும் குத்தகை எதுவும் வழங்கப்படவில்லை என்று கடந்த வாரம் சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ஙா சூ ஹான் சுட்டிக்காட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.








