கோலாலம்பூர், டிச.10-
தாம் எதிர்கொண்டுள்ள கணையப் புற்றுநோய் தொடர்பில் நிபுணத்துவ மருத்துவ ஆலோசனைப் பெறுவதற்கும், இங்கிலாந்தில் உள்ள தனது பேரப்பிள்ளையை பார்ப்பதற்கும் வெளிநாடு செல்ல கடப்பிதழ் கேட்டு, முன்னாள் பிரதமர் டான்ஸ்ரீ முகைதீன் யாசின் செய்து கொண்ட விண்ணப்பத்திற்கு கோலாலம்பூர் செஷன்ஸ நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியது.
இன்று செவ்வாய்க்கிழமை தொடங்கி, வரும் ஜனவரி 14 ஆம் தேதி வரை கடப்பிதழை கொண்டு இருப்பதறகு பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் முகைதீன் செய்து கொண்ட விண்ணப்பத்திற்கு நீதிபதி அஸுரா அல்வி அனுமதி அளித்தார்.
77 வயதான முகைதீன் சிறந்த மருத்துவ வசதியை பெறுவதற்கு வெளிநாடு செல்ல விண்ணப்பிக்கும் உரிமையை கொண்டுள்ளார் என்றும், அவர் தனக்கு எதிரான கிரிமினல் வழக்கிலிருந்து தப்பி ஓடி விடுவார் என்பதற்கு எந்தவொரு ஆதாரமும் இல்லை என்று நீதிபதி அஸுரா அல்வி குறிப்பிட்டார்.
தாம் பிரதமராக இருந்த காலத்தில் பதவியை தவறாக பயன்படுத்தியது மற்றும் சட்டவிரோதப் பணம் மாற்றம் உட்பட நான்கு குற்றசாட்டுகளை முகைதீன், செஷன்ஸ் நீதிமன்றத்தில் எதிர்நோக்கியுள்ளார்.








