Oct 25, 2025
Thisaigal NewsYouTube
முஸ்லிம் அல்லாத அனைத்து வழிபாட்டுத் தலங்களுக்கும் பராமரிப்பு நிதி உதவி ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும் அமைச்சர் ங்கா கோர் மிங் உத்தரவாதம்
அரசியல்

முஸ்லிம் அல்லாத அனைத்து வழிபாட்டுத் தலங்களுக்கும் பராமரிப்பு நிதி உதவி ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும் அமைச்சர் ங்கா கோர் மிங் உத்தரவாதம்

Share:

புத்ராஜெயா, நவ. 28-


முஸ்லிம் அல்லாத தகுதி வாய்ந்த வழிபாட்டுத் தலங்கள் அனைத்துக்கும் ஒவ்வொரு ஆண்டும் பராமரிப்பு செலவினத்திற்கான நிதி உதவி வழங்கப்படும் என்று வீடமைப்பு, ஊராட்சித்துறை அமைச்சர் ங்கா கோர் மிங் இன்று அறிவித்துள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் முஸ்லிம் அல்லாத வழிபாட்டுத் தலத்திற்கான பராமரிப்பு நிதி உதவியானது,
ஒவ்வொரு விண்ணப்பதாரரின் தேவைகளின் அடிப்படையில் இந்த நிதி உதவி வழங்கப்படும் என்று அமைச்சர் தெளிவுபடுத்தினார்.

இதில் அவசர உதவி தேவைப்படுகின்ற வழிபாட்டுத் தலங்கள் மற்றும் இன்னும் இந்த நிதி உதவியை பெறாத ஆலயங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று அமைச்சர் விளக்கினார்.

நிதி உதவி கோரி விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் முஸ்லிம் அல்லாத எந்தவொரு வழிபாட்டுத்தலங்களின் விண்ணப்பங்களையும் வீடமைப்பு, ஊராட்சித்துறை அமைச்சு தடுக்காது என்பதையும் தெலுக் இந்தான் நாடாளுமன்ற உறுப்பினரான ங்கா கோர் மிங், இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் அல்லாத வழிபாட்டுத்தலங்களுக்கு தொடர்ச்சியாக நிதி ஒதுக்கீடு வழங்கப்படுவதைத் தடுப்பதற்கு அது தொடர்பான வழிக்காட்டுதல் விதிமுறைகளில் திருத்தம் செய்யப்படும் என்று சில தினங்களுக்கு முன்பு நாடாளுமன்றத்தில் வீடமைப்பு ஊராட்சித்துறை துணை அமைச்சர் டத்தோ அய்மான் அதிரா சாபு அறிவித்து இருப்பது முஸ்லிம் அல்லாத வழிபாட்டுத்தலங்களின் நிர்வாகத்தினர் மத்தியில் பெரும் அதிருப்தியையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

துணை அமைச்சரின் இந்த அறிவிப்புக்கு பலர், கண்டனம் தெரிவித்தனர்.

ஒரு வழிபாட்டுத்தலத்திற்கு ஒரு முறை, நிதி வழங்கப்படுமானால், அடுத்த மூன்று ஆண்டு காலத்திற்கு நிதி கேட்டு, புதிய விண்ணப்பங்களை அவர்கள் சமர்ப்பிக்க முடியாது. அவர்களின் அத்தகைய விண்ணப்பங்கள் மூன்று ஆண்டுகளுக்கு e-RIBI முறை வாயிலாக தடுக்கப்படும் என்று T துணை அமைச்சர் டத்தோ அய்மான் அதிரா சாபு அறிவித்துள்ளார்.

அண்மையில் முஸ்லிம் அல்லாத வழிபாட்டுத் தலங்களுக்கான 1,074 விண்ணப்பங்களில் 422 விண்ணப்பங்கள் மட்டுமே அங்கீகரிக்கப்பட்டு, கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி வரை 46.1 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு செய்யப்பட்டதாக துணை அமைச்சர் கூறியிருந்தார்.

எனினும் முஸ்லிம் அல்லாத வழிபாட்டுத்தலங்கள் தங்களின் அத்தியாவசியத் தேவைக்கு ஏற்ப நிதி உதவிக்கேட்டு ஆண்டு தோறும் தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என்று அமைச்சர் ங்கா கோர் மிங் இன்று தெளிவுபடுத்தியுள்ளார்.

Related News