கோலாலம்பூர், ஜனவரி.10-
கடந்த ஆண்டு, டிசம்பர் 10-ஆம் தேதி, பெர்சாத்து தலைவர் டான் ஸ்ரீ முகைதீன் யாசின் பதவி விலகக் கோரி நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட, பேராக் மாநில பெர்சாத்து பிரிவுத் தலைவர்கள் பலருக்கு, கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு கடிதம் அனுப்பியுள்ளது.
இந்த கடிதமானது PDF வடிவில் தனது வாட்சாப்பிற்கு அனுப்பப்பட்டதாக தெலுக் இந்தான் பெர்சாத்து கட்சித் தலைவர் கமாருடின் மாஜிட் உறுதிப்படுத்தியுள்ளார்.
பெர்சாத்து கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழுத் தலைவர் டத்தோ முஹமட் ரட்ஸி மனானால் கையெழுத்திடப்பட்ட அக்கடிதத்தில், வரும் ஜனவரி 14-ஆம் தேதி, பெர்சாத்து தலைமையகத்தில் நடைபெறவுள்ள ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அழைக்கப்பட்டிருப்பதாக கமாருடின் குறிப்பிட்டுள்ளார்.
அதே வேளையில், இக்கூட்டத்தில் எடுக்கப்படும் எந்த ஒரு நடவடிக்கையையும் தாம் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருப்பதாகவும் கமாருடின் தெரிவித்துள்ளார்.
கமாருடினைத் தவிர, லாருட், கோப்பேங், பாடாங் ரெங்கா, தாப்பா மற்றும் பாசீர் சாலாக் உள்ளிட்ட பல பெர்சாத்து பிரிவுத் தலைவர்களும் இதே கடிதத்தைப் பெற்றுள்ளனர்.








