Jul 31, 2026
Thisaigal NewsYouTube
கூட்டணி சவால்கள் நிறைந்த நெகிரி செம்பிலான் தேர்தல் / 22 தொகுதிகளில் வென்று ஆட்சியமைப்போம் என பக்காத்தான் ஹராப்பான் நம்பிக்கை
அரசியல்

கூட்டணி சவால்கள் நிறைந்த நெகிரி செம்பிலான் தேர்தல் / 22 தொகுதிகளில் வென்று ஆட்சியமைப்போம் என பக்காத்தான் ஹராப்பான் நம்பிக்கை

Share:

நாளை ஆகஸ்ட் 1-ஆம் தேதி நடைபெறவுள்ள நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில் 21 அல்லது 22 தொகுதிகளில் வென்று வசதியான பெரும்பான்மையுடன் ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ளும் இலக்குடன் பக்காத்தான் ஹராப்பான் களமிறங்கியுள்ளதாக அதன் தேர்தல் இயக்குநர் டத்தோஶ்ரீ அமிருடின் ஷாரி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அதேவேளையில், மாநில அரசாங்கத்தை அமைக்க தேவையான குறைந்தபட்ச 19 இடங்களை வெல்வதில் கூட்டணி நம்பிக்கையுடன் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று இரவு கோலா பிலா, கம்புங் கெமலங் -இல் உள்ள தத்தாரான் மெலாங் -இல் நடைபெற்ற பிரச்சார நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமிருடின், மாறிவரும் அரசியல் சூழல் மற்றும் புதிய கூட்டணிகள் சவாலாக இருந்தாலும் கூட, இனப் பாகுபாட்டை தூண்டும் அரசியலுக்கு பதிலாக மலேசிய மடானி கொள்கை மற்றும் தேசிய ஒற்றுமையை அடிப்படையாகக் கொண்ட தீர்வுகளையே மக்கள் முன்வைத்து வருவதாக தெரிவித்தார்.

அதேவேளையில், ஜோகூர் தேர்தலுக்குப் பிறகு உருவானதாகக் கூறப்படும் "நீல அலை" நெகிரி செம்பிலானிலும் வீசும் என்ற கூற்றை அவர் நிராகரித்தார்.

கடந்த தேர்தல்களில் சிலாங்கூர் மற்றும் நெகிரி செம்பிலானில் "பசுமை அலையை" வெற்றிகரமாக எதிர்கொண்டதாகக் குறிப்பிட்ட அவர், இந்தத் தேர்தலிலும் மக்களின் நம்பிக்கையைப் பெறும் வகையில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.

கடந்த 2018 முதல் மந்திரி பெசார் டத்தோஶ்ரீ அமினுடின் ஹருன் தலைமையிலான அரசின் செயல்பாடுகளை மதிப்பீடு செய்து மக்கள் மீண்டும் ஆதரவு வழங்குவார்கள் என நம்பிக்கை தெரிவித்த அவர், 2018-ஆம் ஆண்டு மாநிலத் தேர்தலில் பக்காத்தான் 20 இடங்களையும், 2023-ஆம் ஆண்டு தேர்தலில் பாரிசான் நேஷனலுடன் இணைந்து மொத்தம் 31 இடங்களையும் வென்றதை சுட்டிக்காட்டினார்.

தேர்தல் களம் தற்போது மாறியிருந்தாலும், மக்களின் ஆதரவு தொடர்ந்து பக்காத்தானுக்கே இருக்கும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும், இன்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு வரை தேர்தல் பிரச்சாரம் முழுவீச்சில் தொடரும் என்றும் அமிருடின் ஷாரி விவரித்துள்ளார்.

Related News