கோலாலம்பூர், நவம்பர்.11-
பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவிக்கவிருக்கும் அமைச்சரவை மாற்றம், வரும் டிசம்பர் மாதம் முற்பகுதியில் நடைபெறலாம் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
வரும் 29 ஆம் தேதி நடைபெறவிருக்கும் சபா தேர்தல் நிறைவு பெற்றவுடன் அமைச்சரவை மாற்றத்தை பிரதமர் அறிவிக்கலாம் என்று கூறப்படுகிறது.
தமது தலைமையிலான அமைச்சரவையில் பொருளாதார குழுவினரை வலுப்படுத்துதல், அமைச்சரவையின் அளவை குறைத்தல், அமைச்சர்களின் சேவைத் திறனை மதிப்பீடு செய்தல் முதலிய முக்கிய அம்சங்களைப் பிரதமர் இம்முறை கருத்தில் கொள்வாார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அம்னோவின் முன்னாள் இளைஞர் பிரிவுத் தலைவர் கைரி ஜமாலுடின் மீண்டும் அமைச்சரவைக்குக் கொண்டு வரப்படலாம் என்றும் கூறப்படுகிறது. கைரி அவ்வாறு கொண்டு வரப்பட்டால், அவருக்கு சுற்றுச்சூழல் மற்றும் நீர்த்துறை அமைச்சர் பதவி வழங்கப்படலாம்.
மேலும் டத்தோ ஶ்ரீ ஜொஹாரி அப்துல் கானி, அனைத்துலக வாணிபம் மற்றும் தொழில்துறை அமைச்சராக நியமிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.








