மலாக்கா, ஜனவரி.04-
"எங்கள் முடிவை எடுக்க நீங்கள் யார்?" எனத் தன்னைச் சீண்டிய அம்னோ இளைஞர் அணித் தலைவர் டாக்டர் அக்மால் சாலேவுக்கு, மலாக்கா மாநில டிஏபி தலைவர் கூ பொயெய் தியோங் பகிரங்கமாகச் சவால் விடுத்துள்ளார். மலாக்கா ஒற்றுமை அரசாங்கத்தை விட்டு டிஏபி வெளியேற வேண்டும் என்ற அக்மாலின் சவாலை "மலிவான தூண்டுதல்" எனத் தள்ளுபடி செய்த கூ பொயேய் தியோங், தாங்கள் யாருடைய தாளத்திற்கும் ஆடப் போவதில்லை எனத் திட்டவட்டமாகக் கூறி பரபரப்பைக் கிளப்பியுள்ளார்.
"இந்த 'ஜாசின் பையன்' ஆரம்பத்திலிருந்தே அரசாங்கத்தைக் கவிழ்க்கவே துடிக்கிறான்" என அக்மாலைக் கிண்டலடித்த அவர், அக்மால் மீண்டும் Muafakat Nasional கூட்டணிக்குத் தான் தூபம் போடுகிறார் எனக் கடும் கண்டனம் தெரிவித்தார். தாங்கள் பதவிக்கோ அல்லது அதிகாரத்திற்கோ ஆசைப்படுபவர்கள் அல்ல என்றும், மக்களின் நலனைக் கருத்தில் கொண்டே முடிவுகளை எடுப்போமே தவிர, அக்மாலின் அரசியல் சதுரங்க வேட்டையில் ஒரு போதும் சிக்கப் போவதில்லை என்றும் டிஏபி தலைமை மலாக்கா மாநாட்டில் முழங்கியுள்ளது. டிஏபி கட்சியின் பொதுச் செயலாளர் அந்தோணி லோக் முன்னிலையில் விடுக்கப்பட்ட இந்த அரசியல் போர்க்குரல், மலாக்கா மாநிலக் கூட்டணியில் பெரும் நிலநடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளதோடு அடுத்தக் கட்ட நகர்வு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பைத் தூண்டியுள்ளது!








