மலாக்கா மாநிலத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியின் சார்பில் பாயா ரும்புட் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் டத்தோ அஸ்மான் அபிடின், பி40 பிரிவைச் சேர்ந்த மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முன்னுரிமை அளிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
பாயா ரும்புட் பகுதியில் தேர்தல் பிரசார நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வரும் அவர், குருபோங் பிபிஆர் குடியிருப்பில் இந்திய சமூகத்தினருடன் இணைந்து தீபாவளிக் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டார்.
அப்போது திசைகளுக்கு பேட்டி அளித்த டத்தோ அஸ்மான் அபிடின், மாற்றுத்திறனாளிகள், சிறுநீரகச் சிகிச்சைக்காக டயாலிசிஸ் மேற்கொள்பவர்கள் எதிர்நோக்கும் போக்குவரத்துச் சிரமங்கள், ஜேகேஎம் உதவிகள் கிடைப்பதில் உள்ள பிரச்சினைகள், பள்ளி மாணவர்களுக்கான உதவிகள் மற்றும் சிறு வணிகங்களுக்கான ஆதரவு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் கவனிக்கப்பட வேண்டியுள்ளதாகக் குறிப்பிட்டார்.

குறிப்பாக, கால்களை இழந்த நிலையில் டயாலிசிஸ் சிகிச்சைக்குச் செல்வதற்கான போக்குவரத்து வசதியும் உதவித்தொகையும் கிடைக்காமல் சிரமப்படும் ஒரு மூதாட்டியைச் சந்தித்ததாகவும் அவர் தெரிவித்தார்.
இதுதவிர, பாயா ரும்புட் பகுதியில் வெள்ளப் பிரச்சினை, போக்குவரத்து நெரிசல், போக்குவரத்து வசதிகள், மற்றும் குடியிருப்புப் பிரச்சினைகள் குறித்தும் கவனம் செலுத்தப்படும் என்றார்.
தாம் வெற்றி பெற்றால், முதல் 100 நாட்களுக்குள் அப்பகுதியில் உள்ள பொழுதுபோக்கு பூங்காக்கள், விளையாட்டு மற்றும் விளையாட்டுத் திடல் வசதிகள் உள்ளிட்ட அடிப்படை உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கான முன்னுரிமைகள் ஆராயப்படும் என்றும் அவர் கூறினார்.
மேலும், வரும் 14ஆம் தேதி நடைபெறவுள்ள வாக்களிப்பில் பாயா ரும்புட் தொகுதி வாக்காளர்கள் அனைவரும் தத்தம் வாக்குச் சாவடிகளுக்குச் சென்று வாக்களிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்ட டத்தோ அஸ்மான் அபிடின், பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளராகத் தமக்கு ஆதரவு வழங்குமாறும் வேண்டுகோள் விடுத்தார்.
இதனிடையே பாயா ரும்புட் தொகுதியில் டத்தோ அஸ்மான் அபிடினுக்கு வாக்களிப்பது மூலம் தொகுதியில் தாங்கள் எதிர்நோக்கி வரும் வீட்டு உரிமைப் பிரச்னை, பொது வாகனப் போக்குவரத்து உட்பட பல பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியும் என்று பாயா ரும்புட் தொகுதியில் உள்ள இந்திய வாக்காளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
நீண்ட காலமாக இவ்வட்டாரத்தில் நிலவி வரும் இந்துக்களின் இடுகாடு மற்றும் ஆற்றங்கரையில் ஈமச்சடங்கு செய்வதற்கான தனியிடம் ஒதுக்கப்பட்டால் இந்தியர்கள் எதிர்நோக்கி வரும் பிரச்னைக்கு தீர்வு காண முடியும் என்று ராஜேந்திரன் நம்பிக்கை தெரிவித்தார்.








