நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றத் தேர்தலில் லிங்கி தொகுதியில் போட்டியிடும் பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளரும், இடைக்கால மந்திரி பெசருமான டத்தோ ஸ்ரீ அமினுடின் ஹாரூன், மீண்டும் ஆட்சி அமைந்தால் தமிழ் மற்றும் சீனப் பள்ளிகளுக்குத் தொடர்ந்து நிதியுதவி வழங்கப்படும் என உறுதி அளித்துள்ளார்.
மாநிலத்தின் ஒட்டுமொத்த நல்வாழ்வைக் கருத்தில்கொண்டு, எந்தவொரு இனப் பாகுபாடுமின்றி, அனைத்துத் தரப்பு மக்களுக்கும் சமமான, உள்ளடக்கிய மேம்பாட்டுத் திட்டங்கள் கொண்டு சேர்க்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
ஒவ்வொரு சமூகத்திற்கும் தனித்தனி எதிர்பார்ப்புகளும் கோரிக்கைகளும் இருப்பது இயல்பு என்றாலும், மாநிலத்தின் அரசியல் மற்றும் பொருளாதார நிலைத்தன்மையைக் காப்பதே தற்போதைய முக்கிய நோக்கமாகும் என அவர் குறிப்பிட்டார்.
கடந்த கால ஆட்சி நிர்வாகத்தில் இஸ்லாமிய சமயக் கல்விக் கழகங்கள், மாற்று சமய விவகாரங்கள், தஹ்ஃபிஸ் மையங்கள் மற்றும் தமிழ், சீனப் பள்ளிகளுக்கு ஒரே சீராக நிதியுதவிகள் வழங்கப்பட்டதைச் சுட்டிக்காட்டிய அவர், இந்த உள்ளடக்கிய அணுகுமுறை நெகிரி செம்பிலான் மாநிலத்தை அனைத்து மக்களுக்குமான ஒரு சிறந்த மாநிலமாக மாற்றும் என்றும் எஞ்சிய கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.








