முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் ரஸாக்கிற்கு வழங்கப்பட்ட நிபந்தனை மன்னிப்பைத் தொடர்ந்து, அமைச்சரவையில் இருந்து தங்கள் பொதுச் செயலாளர் அந்தோணி லோக் மட்டும் ராஜினாமா செய்வார் என ஜசெக கட்சி நேற்று அறிவித்ததை, பாஸ் கட்சியின் தேர்தல் இயக்குநர் டத்தோ ஶ்ரீ முஹமட் சனுசி நோர் ‘பட்டாசு அரசியல்’ என கேலி செய்துள்ளார்.
சத்தம் அதிகமாக இருக்கும், ஆனால் செயலில் ஒன்றும் இருக்காது எனப் பொருளைத் தரும் வகையில் சனுசி நோர் வேடிக்கையாகக் குறிப்பிட்டுள்ளார்.
கெடா மாநில மந்திரி பெசாருமான சனுசி, இதற்கு முன்பு வீடமைப்பு மற்றும் ஊராட்சி அமைச்சர் ஙா கோர் மிங் ராஜினாமா செய்வதாக அறிவித்தும், இறுதியில் ராஜினாமா செய்யவில்லை என்பதைச் சுட்டிக் காட்டினார்.
மேலும் ஜசெக தனது அரசியல் முடிவுகளில் அடிக்கடி நிலைப்பாட்டை மாற்றிக் கொள்வதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
இதனிடையே, நேற்று நடைபெற்ற ஜசெக மத்திய செயற்குழுக் கூட்டத்துக்குப் பிறகு, போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக், அமைச்சரவையில் இருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.
எனினும், ஒற்றுமை அரசாங்கத்தில் ஜசெக தொடர்ந்து நீடிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், அரசாங்கத்திலிருந்து ஜசெக வெளியேற வேண்டும் என்றும், அதன் மூலம் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பெரும்பான்மை ஆதரவை இழந்து நாடாளுமன்றம் கலைக்கப்படும் நிலை ஏற்பட வேண்டும் என்றும் சில தரப்பினர் எதிர்பார்த்துக் காத்திருப்பதாகவும் அந்தோணி லோக் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.








