புக்கிட் மெர்தாஜாம், ஜூன் 18-
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM- மை நாடாளுமன்ற அதிகாரத்தின் கீழ் வைக்கும் பரிந்துரை தொடர்பில் அதன் விளைவுகளை அரசாங்கம் ஆராயும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
இது தொடர்பாக எந்தவொரு தீர்க்கமான முடிவும் எடுப்பதற்கு முன்னதாக இந்த உத்தேசப் பரிந்துரை தொடர்பில் சில கடும் நிபந்தனைகள் விதிக்கப்படுவது தொடர்பாகவும் அரசாங்கம் மிக கவனமாக ஆராய வேண்டியுள்ளது என்று பிரதமர் தெரிவித்தார்.
எந்தவொரு முடிவாக இருந்தாலும் அது குறித்து முதலில் கலந்து ஆலோசிக்க வேண்டியுள்ளது என்று, இன்று பினாங்கு, புக்கிட் மெர்தாஜாம்-மில் ஹஜ்ஜுப் பெருநாளையொட்டி விருந்து நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் டத்தோஸ்ரீ அன்வார் இதனை குறிப்பிட்டார்.








