மலாய் ஒற்றுமை தொடர்பில் பாஸ் கட்சி கொண்டுள்ள நிலைப்பாடு உண்மையானது என்பதை நிரூபிக்க, திரங்கானு மாநிலத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என அம்னோ துணைத் தலைவர் முஹமட் ஹசான் தெரிவித்துள்ளார்.
திரங்கானுவில் பாஸ் மற்றும் அம்னோ இடையே தொகுதிப் பங்கீடு தொடர்பாக உடன்பாடு ஏற்பட்டால், அதே முறையை அடுத்த பொதுத் தேர்தலிலும் பயன்படுத்த முடியும் என ‘தோக் மாட்’ என அழைக்கப்படும் முஹமட் ஹசான் கூறியுள்ளார்.
மேலும் பாஸ் கட்சியின் உண்மையான நோக்கத்தை அறிய விரும்புவதாகக் குறிப்பிட்ட அவர், மலாய் ஒற்றுமையில் அக்கறை இருந்தால், நாடாளுமன்றத் தொகுதிகளை இரு கட்சிகளும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
2023 - ஆம் ஆண்டு திரங்கானு மாநிலத் தேர்தலில் அம்னோ போட்டியிட்ட 27 தொகுதிகளிலும் தோல்வியடைந்தது.
அதேபோல், 2022 - ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் மாநிலத்தில் உள்ள எட்டு நாடாளுமன்றத் தொகுதிகளிலும் அம்னோ வெற்றி பெறவில்லை.
எனினும், மாநிலத்திற்கு மாநிலம் அரசியல் நிலவரம் மாறுபடுவதால், அனைத்து இடங்களிலும் ஒரே மாதிரியான அணுகுமுறையை அம்னோ கடைப்பிடிக்க முடியாது என முஹமட் ஹசான் தெரிவித்துள்ளார்.
அதேவேளையில் ஜோகூர் மற்றும் சிலாங்கூர் மாநிலங்களின் அரசியல் சூழல் தனித்துவமானது என்றும், கடந்த மாதம் நடைபெற்ற நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில் மலாய் கட்சிகளுக்கு இடையிலான மோதல்களைத் தவிர்க்கும் அணுகுமுறை பின்பற்றப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.








