நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் பதவிக்கு அந்தோனி லோக் போட்டியிடுவார் என எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் தீய நோக்கத்துடன் திட்டமிடப்பட்டவை என ஜசெக பொதுச் செயலாளர் அந்தோனி லோக் திட்டவட்டமாக நிராகரித்துள்ளார்.
மாநில அரசியலமைப்பின்படி மலாய்-முஸ்லிம் மட்டுமே அப்பதவிக்குத் தகுதியுடையவர் என்பதால் தனக்கு அந்தத் தகுதி இல்லை என்று அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி மீண்டும் ஆட்சியமைத்தால் மாநிலத்தின் மந்திரி பெசார் வேட்பாளராக அமினுடின் ஹாருன் மட்டுமே இருப்பார் என்று அவர் உறுதிப்படுத்தினார். லிங்கி தொகுதியில் அமினுடின் தோல்வியடைந்தால் அந்தோனி லோக் மந்திரி பெசார் ஆவாரா என்று அம்னோ பொதுச் செயலாளர் அஷ்ரஃப் வாஜ்டி துசுகி எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.
மேலும் செய்தியாளர்களிடம் பேசிய அந்தோனி லோக், அரசியல் எதிரிகள் வேண்டுமென்றே இத்தகைய வதந்திகளைப் பரப்புவதாகக் குற்றம் சாட்டினார்.








